பவர் டில்லர், பவர் வீடர் கருவிக்கு விவசாயிகளுக்கு மானியம் வழங்கல்
கள்ளக்குறிச்சி; பவர் டில்லர் மற்றும் விசைக்களை எடுக்கும் கருவி(பவர் வீடர்) மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. இது குறித்து கலெக்டர் பிரசாந்த் விடுத்துள்ள செய்திகுறிப்பு;கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் வேளாண் இயந்திரமயமாக்குதல் திட்டம் செயல்படுத்தி வருகிறது. நடப்பாண்டு 2024-25க்கு மாவட்டத்திற்கு அனைத்து வகை இனங்களில் மொத்தம் 90 எண்களுக்கு ரூ.80 லட்சத்து 90 ஆயிரத்திற்கு இலக்கு பெறப்பட்டுள்ளது.அதில் தனிப்பட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் பவர் டில்லர் பெற அதிகபட்சம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம், விசைக்களை எடுப்பான்களுக்கு(பவர் வீடர்) அதிகபட்சம் ரூ.63 ஆயிரம் அல்லது கருவியின் மொத்த விலையில் 50 சதவிகிதம் ஆகியவற்றில் எது குறைவோ அத்தொகை சிறு, குறு, ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் பெண் விவசாயிகளுக்கு மானியமாக வழங்கப்படுகிறது. இதர விவசாயிகளுக்கு 40 சதவிகிதம் வழங்கப்படுகிறது.மேலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் பிரிவு விவசாயிகளுக்கு 20 சதவீதம் கூடுதல் மானியம் வழங்கப்படுகிறது. பொதுபிரிவு சிறு, குறு விவசாயிகளுக்கு 10 சதவீத கூடுதல் மானியத்துடன் கருவிகள் வழங்கப்படுகிறது. மானியத் தொகை இயந்திரங்களின் மொத்த விலைக்கு தகுந்தவாறு மாறுபடும்.விவசாயிகள் பங்களிப்பு தொகையை இணைவழி அல்லது வங்கி வரைவோலை மூலமாக சம்மந்தப்பட்ட நிறுவனம், விநியோகஸ்தருக்கு அனுப்பி வைத்து வேளாண் இயந்திரங்களை மானியத்தில் பெற்றுக் கொள்ளலாம்.இத்திட்டம் தொடர்பான முழு விவரங்களை விழுப்புரம் வழுதரெட்டி வேளாண்மை பொறியியல் துறை அலுவலகம் -04146-294888, கள்ளக்குறிச்சி தச்சூர் கூட்ரோடு வேளாண் பொறியியல் உதவி செயற்பொறியாளர் 04151-226370 மற்றும் திருக்கோவிலுார் வேளாண் உதவி செயற்பொறியாளர் அலுவலகம் 04153-253333 தொடர்பு கொண்டு விவசாயிகள் பயன் பெறலாம்.