கூ.கள்ளக்குறிச்சியில் சிமெண்ட் சாலை அமைக்க கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் அகில இந்திய விவசாயிகள் மகாசபை மற்றும் அகில இந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். உளுந்துார்பேட்டை அருகே கூ.கள்ளக்குறிச்சி கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இதில், 30 குடும்பங்கள் வசிக்கும் ரேஷன் கடை வீதியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன் துவங்கியது. அதே கிராமத்தை 4 நபர்கள் சேர்ந்து சாலை அமைக்கும் பணியை தடுத்தனர். இதை கண்டித்தும், கூ.கள்ளக்குறிச்சி கிராம பட்டியலின மக்களின் இடுகாட்டை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், கருமகாரிய கொட்டகை அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இது தொடர்பாக பல முறை மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், அகில இந்திய விவசாயிகள் மகாசபை மற்றும் அகில இந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம் சார்பில் பொதுமக்கள் சிலர் கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த டி.ஆர்.ஓ., ஜீவா மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, 2 நாட்களில் சாலை அமைக்கப்படும் என தெரிவித்தனர். இதையடுத்து, தர்ணாவில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.