நுாறுநாள் வேலை ஊதியம் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே நுாறு நாள் வேலை ஊதியம் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உளுந்துார்பேட்டை அடுத்த திருநாவலுார் கிராமத்தில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் வாரம் ஒரு வார்டு வீதம் பொது மக்களுக்கு வேலை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அக்கிராமத்தில் உள்ள 3வது வார்டு பொதுமக்களை தவிர்த்து மீதமுள்ள அனைவருக்கும் வேலை செய்ததற்கான ஊதியம் பி.டி.ஓ., அலுவலகம் மூலம் அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களாக சம்பளம் வழங்காமல் அதிகாரிகள் காலம் தாழ்த்தி வந்தனர். ஊதியம் வழங்காதது குறித்து அப்பகுதி மக்கள் பலமுறை அலுவலகத்திற்கு சென்று கேட்டபோது அதிகாரிகள் முறையான பதில் அளிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த திருநாவலுார் 3வது வார்டு மக்கள் கெடிலம்- பண்ருட்டி சாலை, திருநாவலுார் பஸ் நிறுத்தம் அருகே நேற்று காலை 8:00 மணிக்கு, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டம் காலை 8:30 மணிக்கு விலக்கி கொள்ளப்பட்டது. மறியல் காரணமாக 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.