ரேஷன் கடை விற்பனையாளர் பணி நேர்காணல் நிறைவு: 3007 பேர் பங்கேற்பு
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் நடந்த ரேஷன் கடை விற்பனையாளர் பணிக்கான நேர்காணலில், 3,007 விண்ணப்பதாரர்கள் பங்கேற்றனர்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர் பணியிடத்திற்கு தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்குமாறு, மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது. 70 விற்பனையாளர் பணியிடத்திற்கு, 5,095 பேர் விண்ணப்பித்திருந்தனர்.இதில் 166 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது. மீதமுள்ள 4,929 விண்ணப்பதாரர்கள் நேர்காணலில் பங்கேற்க 'ஹால் டிக்கெட்' வெளியிடப்பட்டது.அதன்படி, கள்ளக்குறிச்சி சி.எம்.எஸ்., வளாகத்தில் கடந்த 25ம் தேதி நேர்காணல் தொடங்கியது. தினமும் 900 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற நிலையில், நேற்றுடன் நேர்காணல் நிறைவடைந்தது. 6 நாட்கள் நடந்த நேர்காணலில், 3,007 விண்ணப்பதாரர்கள் மட்டுமே பங்கேற்றனர். 1,922 பேர் பங்கேற்கவில்லை. நேர்காணலுக்கு உறுதுணையாக இருந்த கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் நன்றி தெரிவித்தார்.