கோமுகி, மணிமுக்தா அணைகளில் வெளியேற்றும் நீர் குறைப்பு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், இரு அணைகளிலும் நீர் வரத்து குறைந்ததால், ஆறு வழியாக தண்ணீரின் அளவு படிப்படியாக குறைத்து வெளியேற்றப்பட்டு வருகிறது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், பெய்த பலத்த மழையில் கல்வராயன்மலை அடிவாரத்தில் உள்ள கோமுகி அணை மற்றும் மணிமுக்தா அணைகள் நிரம்பியது. தொடர்ந்து அணைக்கு நீர் வரத்து இருந்ததால், அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் முழுவதும் ஆறு வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் மணிமுக்தா அணையில் அதிகபட்சமாக 16 ஆயிரத்து 100 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. கோமுகி அணையில் நீர் வரத்து குறைந்ததால் 1,800 கன அடி உபர் நீர் வெளியேற்றப்பட்டது.இந்நிலையில், இரு அணைகளுக்கும் நீர் வரத்து குறைந்ததால், ஆறு வழியாக வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவும் படிப்படியாக குறைத்து தற்போது உபரி நீர் மட்டும் வெளியேற்றப்பட்டு வருகிறது.அதன்படி நேற்று மணிமுக்தா அணையில் இருந்து ஆறு வழியாக 5000 கன அடியும், கோமுகி அணையில் 1,600 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டது.