தியாகதுருகம் வார சந்தை வளாகத்தில் நிரந்தர கடைகள் கட்டித்தர கோரிக்கை
தியாகதுருகம்: தியாகதுருகம் வார சந்தை வளாகத்தில் நிரந்தர கான்கிரீட் கடைகள் கட்டித் தர வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தியாகதுருகம் பஸ் நிலையம் அருகே சனிக்கிழமை தோறும் வார சந்தை நடந்து வருகிறது. 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கி செல்ல சந்தைக்கு வருகின்றனர். விவசாயிகள் ஆடு, மாடுகளை விற்பனை செய்ய கொண்டு வருவதால் வெளியூர் வியாபாரிகள் அதிக அளவில் வருகின்றனர். குறிப்பாக காய்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்ய வரும் வியாபாரிகள் வெட்ட வெளியில் கடைகள் அமைக்கின்றனர். பாதுகாப்பான கட்டடம் இல்லாததால் மழை மற்றும் வெயிலில் இருந்து பாதுகாக்க தார்பாய்களை கட்டி பொருட்களை விற்பனை செய்கின்றனர். கடைகள் அமைக்கும் வியாபாரிகளிடம் வரி வசூல் செய்யப்படுகிறது. ஆனால், வியாபாரிகளுக்கு போதிய அடிப்படை வசதிகள் செய்துதரப்படவில்லை. வெட்ட வெளி கடைகளால் மழை காலங்களில் பொருட்கள் மழையில் நனைந்து வீணாகிறது. அதேபோல் வெயில் காலங்களில் மதிய நேரத்தில் காய்கறி, கீரை உள்ளிட்ட பொருட்களை வெப்பத்திலிருந்து பாதுகாக்க முடியாமல் தவிக்கின்றனர். இதற்கு தீர்வாக வார சந்தை நடக்கும் வளாகத்தில் நிரந்தர கான்கிரீட் கடைகள் கட்டித்தர பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.