உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மாணவர்களின் ஆபத்தான பயணம் தவிர்க்க கூடுதல் பஸ் வசதி ஏற்படுத்த கோரிக்கை

மாணவர்களின் ஆபத்தான பயணம் தவிர்க்க கூடுதல் பஸ் வசதி ஏற்படுத்த கோரிக்கை

திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் இருந்து திருப்பாலபந்தல் வழியாக கடுவனுார் செல்லும் வழித்தடத்தில் கூடுதல் டவுன் பஸ்களை இயக்க போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருக்கோவிலுாரில் இருந்து மாலை 4:30 மணிக்கு புறப்படும், அரசு டவுன் பஸ் தடம் எண் 2டி திருப்பாலபந்தல், மாடாம்பூண்டி, அரியலுார் வழியாக கடுவனுார் வரை செல்கிறது. இதில் பள்ளி மாணவர்கள் முண்டியடித்துக் கொண்டு ஏறி படிக்கட்டில் தொங்கியவாறு ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனர். இந்த வழித்தடத்தில் கூடுதல் அரசு டவுன் பஸ் ஏதும் இல்லாததால், இயக்கப்படும் ஒரே ஒரு பஸ்சை பிடித்து கொண்டு எப்படியாவது ஊருக்கு சென்றுவிட வேண்டும் என்ற கட்டாயத்தில் மாணவர்கள் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். இந்த வழித்தடத்தில் பல கிராமங்களில் மாணவர்கள் இறங்கினாலும், திருப்பாலபந்தல் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள், பகண்டை கூட்ரோடு வரை பயணிக்கின்றனர். அங்கிருந்து அரியலுார் அரசு மேல்நிலை பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கடுவனூர் வரை பயணிக்கின்றனர். அரசு பள்ளி மாணவர்கள் அதிக அளவில் பயணிக்கும் வழித்தடத்தில் காலையிலும், மாலையிலும் ஒரே ஒரு பஸ் மட்டுமே இயக்கப்படுவது தான் மாணவர்களின் இதுபோன்ற ஆபத்தான பயணத்திற்கு காரணமாக உள்ளது. எனவே இவ்வழி தடத்தில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. அதேபோல் திருக்கோவிலுார் பஸ் நிலையத்தில் இருந்து மாலை 4:35 மணிக்கு புறப்படும் வழித்தடம் 8 பஸ் அரும்பாக்கம், செட்டித்தாங்கல், வேங்கூர், பழங்கூர், நத்தாமூர் வழியாக தாமல் வரை செல்கிறது. மாலை 5:00 மணிக்கு பாசார் வழியாக ரிஷிவந்தியம் செல்லும் பஸ், தடம் எண் 25 சி பஸ் என திருக்கோவிலுாரில் இருந்து விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் அரசு டவுன் பஸ்களின் நிலை இதுபோல் உள்ளது. எனவே மாணவர்களின் தேவைக்கேற்ப முக்கிய வழித்தடங்களில் அரசு டவுன் பஸ்களின் எண்ணிக்கையை அதிகரிக்க போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ