நுாலக கட்டுமான பணியை துவக்்க கோரிக்கை
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட நுாலக கட்டுமான பணிகளை விரைந்து துவங்க கோரிக்கை எழுந்துள்ளது. கடந்த 2019ல் கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக உருவெடுத்தது. அதன் தொடர்ச்சியாக, கள்ளக்குறிச்சி நுாலகத்தை, மாவட்ட நுாலகமாக்க நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் கடந்த 6 ஆண்டுகளாக நுாலகத்திற்கு, சொந்த கட்டடம் கட்ட பணிகள் துவக்கப்படாமல் இருந்தது.இந்நிலையில் கடந்தாண்டு கால்நடை மருத்துவமனை வளாகத்தில், நுாலகத்திற்கு இடம் தேர்வு செய்ய பணிகள் நடந்தன. ஆனால், அந்த திட்டம் திடீரென தடைபட்டது. பழைய தாலுகா அலுவலக வளாகத்தில், நுாலகத்திற்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக, மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. ஆனால் அறிவிப்பு வெளியாகி பல மாதங்களாகி விட்ட நிலையில் இன்று வரை கட்டுமான பணிகள் துவங்குவது குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில், அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படாமல் உள்ளது. அதனால், புதிய மாவட்ட நுாலக கட்டடம் கட்டுவதற்கான பணிகளை விரைந்து துவக்கி, முடிக்க வேண்டும் என கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.