உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ரிஷிவந்தியம் சிவன் கோவில் திருப்பணி பாதியில் நிறுத்தம்! பணம் இல்லை என கை விரித்த அறநிலையத்துறை அதிகாரிகள்

ரிஷிவந்தியம் சிவன் கோவில் திருப்பணி பாதியில் நிறுத்தம்! பணம் இல்லை என கை விரித்த அறநிலையத்துறை அதிகாரிகள்

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியத்தில் 1,000 ஆண்டுகள் பழமையான அர்த்தநாரீஸ்வரர் கோவில் உள்ளது. மூலவர் சுயம்பு லிங்கத்தின் மீது தேன் அபிஷேகம் செய்யும்போது ஒளி வடிவில் சிவன் பார்வதியாக சுவாமியின் உருவம் பிரதிபலிக்கும் அதிசயம் இங்கு நிகழ்கிறது. இதைக் காண தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் தினமும் வருகின்றனர். குறிப்பாக அமாவாசை தினத்தில் திருமண தடை நீங்க பரிகார பூஜை செய்ய ஏராளமானோர் வருகின்றனர். இக்கோவிலுக்கு கடந்த 2007ம் ஆண்டு தி.மு.க., ஆட்சியில் பக்தர்கள் முயற்சியால் நிதி திரட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இந்நிலையில் கோவிலின் மேல்தளம் சேதம் அடைந்து மழை காலத்தில் மேற்கூரையில் தண்ணீர் கசிந்தது. இதையடுத்து கோவில் கும்பாபிஷேகம் நடத்த பக்தர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. தொகுதி எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயன் முயற்சியால் திருப்பணி மேற்கொள்ள ரூ. 66 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. குறைந்தது 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தால் மட்டுமே திருப்பணி வேலைகளை முழுமையாக முடிக்க முடியும். இருப்பினும் ஒதுக்கப்பட்ட நிதியை கொண்டு கடந்த ஆண்டு திருப்பணி வேலைகள் துவங்கி ராஜ கோபுரம் பெயிண்ட் பூசும் வேலை முடிந்தது. அதைத்தொடர்ந்து கோவிலின் உட்பிரகாரத்தில் உள்ள கருங்கல் துாண் மற்றும் மேற்கூரையில் இருந்த எண்ணை பிசுபிசுப்பு மற்றும் அழுக்குகள் அகற்றப்பட்டது. மேற்கூரை தளத்தில் செராமிக் ஓடுகள் பதிக்காமல் மெலிதான கான்கிரீட் கலவை கொண்டு பூசப்பட்டது. இது சில வாரங்களிலேயே மழை நீர் கசிந்து உள்ளே ஒழுகத் துவங்கியது. இதனால் செராமிக் ஓடு பதித்தால் மட்டுமே நீர் கசிவை தடுக்க முடியும் என்பதால் மேலே அமைக்கப்பட்ட கான்கிரீட் தளம் உடைத்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. மேற்கொண்டு பணிகளை முடிக்க பணம் இல்லாததால் திருப்பணி வேலைகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. பணிகளை முழுமையாக முடிக்க குறைந்தது 1.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை அரசு கண்டுகொள்ளாமல் கிடப்பில் போட்டது. இந்நிலையில் சமீபத்தில் பெய்த மழைக்கு மேற்கூரை கசிந்து கோவில் உள் ளே குளம் போல் தண்ணீர் தேங்கியது. இது பக்தர்களை வேதனைக்கு உள்ளாக்கியது. கடந்த வாரம் ஊர் முக்கியஸ்தர்கள் சேர்ந்து இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவை நேரில் சந்தித்து கோவில் திருப்பணிகளை முழுமையாக முடிக்க நிதி ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்க சென்றனர். அமைச்சரை சந்திக்க முடியாததால் அறநிலையத்துறை அதிகாரிகளை சந்தித்து விபரத்தை எடுத்துக் கூறினர். அதற்கு அரசிடம் போதிய பணம் இல்லை; அதனால் நிதி ஒதுக்க முடியாது என கூறி அதிகாரிகள் தரப்பில் கைவிரித்து அனுப்பி விட்டனர். இதனால் ஏமாற்றத்துடன் ஊர் திரும்பினர். தற்போது கோவில் திருப்பணி பாதியில் நிறுத்தப்பட்டதால் மழை பெய்யும் போது மேற்கூரை முழுவதும் தண்ணீர் ஒழுகுகிறது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவில் கட்டுமானம் பலகீனம் அடைந்து விடுமோ என பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனடியாக ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவில் திருப்பணிக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை விரைந்து முடித்து கும்பாபிஷேகம் நடத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடு த்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி