உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தேவபாண்டலத்தில் சாலை மறியல்

தேவபாண்டலத்தில் சாலை மறியல்

சங்கராபுரம்; சங்கராபுரம் அருகே நடந்த சாலை மறியல் போராட்டத்தால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலம் காலனி மக்கள் நேற்று முன்தினம் ஏரிக்கரையில் உள்ள முனியப்பர் கோவிலில் முப்பூசை வைத்து வழிபாடு செய்தனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த அண்ணாமலை மகன் சதிஷ்குமார், 30; கோவில் தனக்கு சொந்தம் என்று உரிமை கொண்டாடி, பூஜை செய்ய கட்டணம் வசூல் செய்தார். இதனை தட்டிக் கேட்ட பொதுமக்களை சதிஷ்குமார் உருட்டு கட்டையால் தாக்கியதில் இருவர் படுகாயமடைந்தனர். இது குறித்து சங்கராபுரம் போலீசில் நேற்று முன்தினம் புகார் அளிக்கப்பட்டது. நேற்று வரை சதிஷ்குமார் கைது செய்யப்படவில்லை. இதனை கண்டித்து 100க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 10 மணிக்கு சங்கராபுரம் - திருவண்ணாமலை சாலையில் தேவபாண்டலத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன், சப்இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் பொதுமக்களை தாக்கிய சதிஷ்குமாரை உடனடியாக கைது செய்வதாக உறுதி அளித்ததின்பேரில், காலை 11:00 மணிக்கு மறியல் விலக்கி கொள்ளப்பட்டது. இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி