உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / விதிமீறும் வாகன ஓட்டிகளுக்கு ஆர்.டி.ஓ எச்சரிக்கை! லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என அறிவிப்பு

விதிமீறும் வாகன ஓட்டிகளுக்கு ஆர்.டி.ஓ எச்சரிக்கை! லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என அறிவிப்பு

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி வாகனங்களை இயக்கினால் ஓட்டுனர் உரிமம் ரத்து உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயபாஸ்கரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.மோட்டார் வாகன சட்டத்தின்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வாகனங்களை அதிவேகமாக ஓட்டுவது, குடிபோதையில் வாகனங்களை இயக்குவது, தலைக்கவசம் இல்லாமல் இயக்குவது, மொபைல் பேசியவாறு இயக்குவது, சரக்கு வாகனத்தில் அதிக பாரம் ஏற்றுவது, சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றுவது, காரில் சீட் பெல்ட் அணியாமல் வாகனத்தை இயக்குவது போன்ற போக்குவரத்து விதிமுறை மீறும் வாகனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.இதுபோன்று விதி மீறும் வாகன ஓட்டிகளின் வாகன ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக 3 மாதத்திற்கு ரத்து செய்யப்படும்.அத்துடன் வாகனத்தின் தகுதி சான்று, காப்புச்சான்று, சாலை வரி ஆகியவைகள் இல்லாமல் ஓட்டப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்வதுடன் அதிக தொகையிலான அபராதமும் விதிக்கப்படும்.திருமணம், துக்க நிகழ்ச்சி உள்ளிட்ட உபயோகங்களுக்கு சரக்கு வாகனத்தை பொதுமக்கள் பயன்படுத்துகின்றனர். சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் சென்று விபத்து ஏற்பட்டால் இறந்தவர் மற்றும் காயம் அடைபவர்களுக்கு 'விபத்து காப்பீடு' கிடையாது. எனவே பொதுமக்கள் சரக்கு வாகனங்களில் பயணிப்பதை தவிர்க்க வேண்டும்.அத்துடன் தமிழக அரசின் புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி ஹெல்மெட் அணியா விட்டால் 1000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும். போக்குவரத்து சிக்னலை மதிக்காமல் சாலையை கடப்பவர்களுக்கு முதல் முறை 500 ரூபாய், 2வது முறை 1,500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.இருசக்கர வாகனங்களை பதிவு செய்யாமல் இருந்தால் முதல் முறை 500 ரூபாய், 2ம் முறை 1,500 ரூபாய், பொது இடங்களில் வாகனங்களை ஆபத்தான முறையில் நிறுத்தி விட்டு சென்றால் முதல்முறை 500 ரூபாய், 2ம் முறை 1,500 ரூபாய்,அதிகாரிகளிடம் தவறான தகவலை அளித்தால் 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.மக்களை அச்சறுத்தும் வகையில் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுவோருக்கு முதல்முறை 1,000 ரூபாய், 2வது முறை 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுவர்களுக்கு முதல் முறை 500 ரூபாய், 2வது முறை 1,500 ரூபாய், கார்கள், ஜீப்களை அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிவேகமாக ஓட்டினால் 2,000 ரூபாய், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவருடன் அமர்ந்து பயணிப்பவருக்கு 10 ஆயிரம் ரூபாய், ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு வழிவிட மறுத்தால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.சாலைகளில் பந்தயங்களில் ஈடுபட்டாலோ, மாசு ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை இயக்கினாலோ 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.வாகனம் ஓட்டும்போது மொபைல் போன் பயன்படுத்தினால் முதல்முறை 1,000 ரூபாய், 2வது முறை 10 ஆயிரம் ரூபாய் அபராதம் என தமிழக அரசு அபராத தொகையை உயர்த்தி அறிவித்துள்ளது.எனவே மாவட்டத்தில் வாகன ஓட்டிகள் விதிமுறைகளை முறையாக கடைபிடித்து வாகனங்களை இயக்கிட வேண்டும்.பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் பாதுகாப்பான போக்குவரத்தை ஏற்படுத்திட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயபாஸ்கரன் கோரிக்கை விடுத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை