பள்ளி வாகனங்கள் ஆய்வு முகாம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளி வாகனங்களின் ஆய்வு முகாம் நேற்று துவங்கியது. கள்ளக்குறிச்சி நீலமங்கலம் ஏ.கே.டி பள்ளி வளாகத்தில் கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் நடத்தப்பட்ட பள்ளி வாகனங்கள் ஆய்வு முகாமில் கலெக்டர் பிரசாந்த் வாகனங்களின் இயக்க நிலை மற்றும் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்தார். கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் 47 பள்ளிகளில் உள்ள 460 வாகனங்கள் ஆய்வு செய்யப்படுகிறது. நேற்று நடந்த முகாமில் 196 வாகனங்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. இதில் 22 பஸ்கள் இயக்க நிலைகள் மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள் கண்டறியப்பட்டு நிவர்த்தி செய்து மறு ஆய்விற்கு உட்படுத்திட திருப்பி அனுப்பப்பட்டது. படிப்படியாக மீதமுள்ள வாகனங்கள் ஆய்வு செய்யப்பட உள்ளன.உளுந்துார்பேட்டை வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் 49 பள்ளிகளில் உள்ள 161 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தொடந்து, போக்குவரத்து மற்றும் தீயணைப்புத்துறை சார்பில் விபத்து காலங்களில் வாகன டிரைவர்கள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு செயல் விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது.டிரைவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு, வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் சார்பில் நடத்திடவும், அனைத்து டிரைவர்களுக்கும் காப்பீடு வசதி ஏற்படுத்திடவும் வட்டார போக்குவரத்து துறை அலுவலரிடம் அறிவுறுத்தப்பட்டது.பள்ளி வாகனங்களை இயக்கும் டிரைவர்கள், மிகுந்த கவனத்துடனும், பாதுகாப்பாகவும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இயக்கிட வேண்டும் என கலெக்டர் பிரசாந்த் அறிவுறுத்தினார். ஆய்வின்போது, கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயபாஸ்கரன், டி.எஸ்.பி., தேவராஜ், மோட்டார் வாகன ஆய்வாளர் மாணிக்கம், டி.இ.ஓ., துரைராஜ், தீயணைப்பு நிலைய அலுவலர் சக்திவேல் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.