கடலுார் மாவட்டத்திற்கு வெள்ள நிவாரணம் கள்ளக்குறிச்சியில் இருந்து அனுப்பி வைப்பு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ஒன்றிய அலுவலகத்திலிருந்து ஊரக வளர்ச்சித் துறை சார்பில் கடலுார் மாவட்டத்திற்கு பெஞ்சல் புயல், வெள்ள நிவாரண பொருட்கள் அனுப்பும் நிகழ்ச்சி நடந்தது.பெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம், கடலுார், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ததால் பெருத்த சேதம் ஏற்பட்டது. கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு பிற மாவட்டங்களிலிருந்து நிவாரண உதவிகள் அனுப்பப்பட்டு வருகிறது.அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருந்து 5,700 கிலோ அரிசி, 1,100 கிலோ துவரம் பருப்பு, 1,100 கிலோ சர்க்கரை, 1,100 லிட்டர் சமையல் எண்ணெய், 1,100 கிலோ உப்பு, 90 கிலோ மிளகாய் துாள், 90 கிலோ மல்லித் துாள்.90 கிலோ சம்பார் துாள், 90 கிலோ ரசப்பொடி, 90 கிலோ கடுகு, 90 கிலோ சீரகம், 90 கிலோ மிளகு, 90 கிலோ மஞ்சல் துாள், 90 கிலோ வெந்தயம், 90 கிலோ டீத்துாள், 900 கிலோ கோதுமை மாவு, 450 கிலோ புளி, தீப்பெட்டி.காப்பித்துாள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண உதவிப் பொருட்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு கடலுார் மாவட்டத்திற்கு லாரி மூலம் கலெக்டர் பிரசாந்த் அனுப்பி வைத்தார்.நிகழ்ச்சியில், டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ரமேஷ்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தனலட்சமி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் வெங்கட்ரமணன் உட்பட பலர் பங்கேற்றனர்.