திருக்கோவிலுார் உயர்மட்ட பாலம் கட்டுவதற்கு இடம் அளவீடு பணி தீவிரம்
-திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் தரைபாலத்தை உயர்மட்ட பாலமாக மாற்ற அளவிடும் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது.திருக்கோவிலுார் , தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே திருக்கோவிலுார் - அரகண்டநல்லுாரையும் இணைக்கும் வகையில் தரைபாலம் உள்ளது. நுாறாண்டுகள் பழமையான இந்த பாலம் அவ்வப்பொழுது சீரமைக்கப்படும், என்றாலும் வெள்ளப் பெருக்கின் போது சிதிலமடைந்து விடும். இதன் காரணமாக உயர்மட்ட பாலமாக மாற்றக் கோரி 10 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இதற்கு மாற்றாக இருக்கும் திருக்கோவிலுாரையும் - மணம்பூண்டியையும் இணைக்கும் உயர்மட்ட பாலம் 1961 ம் ஆண்டு கட்டப்பட்டது. 63 ஆண்டுகளை கடந்து விட்டது. தற்போதைய வெள்ளத்தில் தரை பாலம் முற்றிலுமாக அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆயுட்காலத்தை நிறைவு செய்துள்ள உயர்மட்ட பாலத்தில், போக்குவரத்து அதிகரித்திருப்பது பாலத்தின் உறுதித் தன்மையிலும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.எனவே தரை பாலத்துக்கு மாற்றாக உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என்ற அழுத்தம் அனைத்து தரப்பிலிருந்தும் எழுந்ததை அடுத்து, ரூ. 102 கோடி மதிப்பீட்டில் திட்டம் தயார் செய்து கருத்துருக்கள் அரசின் ஒப்புதலுக்காக நெடுஞ்சாலை துறை கூடுதல் தலைமைச் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் பாலம் அமையும் பகுதியில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் இருக்கும் ஆக்கிரமிப்புகள், பட்டா இடத்தை இழப்பீட்டு அடிப்படையில் நெடுஞ்சாலைத்துறை கையகப்படுத்துவதற்கு தேவையான இடம் குறித்து தனித்தனியாக அளவீடு செய்யும் பணியை நெடுஞ்சாலைத்துறையினர் துல்லியமாக அளக்கும் பணியை நிறைவு செய்துள்ளனர்.எனவே எதிர்வரும் நிதியாண்டில் உயர்மட்ட பாலம் கட்டுவதற்கான நிதி ஒதுக்கீடு செய்து, விரைவில் பணிகள் துவங்கும் என நெடுஞ்சாலைத்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்களின் 10 ஆண்டு கால கோரிக்கை நிறைவேறும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது.