சமூக நல துறை ஆய்வுக் கூட்டம்
கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் சமூக நல அலுவலக பணியாளர்களின் ஆய்வுக் கூட்டம் நடந்தது. கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடந்த கூட்டத்தில், சமூக நலத் துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தும், அதன் முன்னேற்றம், மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக கேட்டறிந்து ஆய்வு செய்யப்பட்டது. முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் முதிர்வு தொகை பெறாத பயனாளிகள் குறித்தும் அதன் மீது மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் சமூக நல அலுவலர்களுடன் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.வட்டார அளவில் பணிபுரியும் சமூக நலப் பணியாளர்கள் பொதுமக்களை, அவர்களது இருப்பிடத்திற்கே சென்று திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து தகுதியான பயனாளிகளை தகுதிக்கேற்ப திட்டங்களில் விண்ணப்பிக்க செய்து உரிய நலத்திட்டங்களை வழங்கிட அறிவுறுத்தப்பட்டது.தொடர்ந்து குழந்தை திருமணம், இளம் வயதில் கர்ப்ப நிகழ்வுகள் ஏற்படாமல் தடுக்க வேண்டும். தடுப்பு மற்றும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வட்ட அளவில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்க வேண்டும்.குழந்தை திருமணம் குறித்து பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள், பெண் குழந்தைகள் பள்ளி இடைநிற்றலை தடுக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது.மேலும் குழந்தை திருமண நடவடிக்கையில் ஈடுபடும் அனைவர் மீதும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். அரசு, தனியார் அலுவலகங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடை சட்டத்தின் கீழ் உள்ளகக் குழு அமைப்பதை உறுதி செய்திட வேண்டும். ஒவ்வொரு அலுவலகங்களிலும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார்களை பெரும் பொருட்டு பாதுகாப்புப் பெட்டி பொருத்திடவும், அனைத்து அலுவலகங்களிலும் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி கண்காணித்திடவும் அறிவுறுத்தினார். கூட்டத்தில் டி.ஆர்.ஓ., ஜீவா, மாவட்ட சமூக நல அலுவலர் தீபிகா உட்பட பலர் பங்கேற்றனர்.