உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / போதிய அரசு பஸ் வசதி இன்றி மாணவர்கள் தவிப்பு! ஆபத்தான நிலையில் பயணிப்பதால் அச்சம்

போதிய அரசு பஸ் வசதி இன்றி மாணவர்கள் தவிப்பு! ஆபத்தான நிலையில் பயணிப்பதால் அச்சம்

ரிஷிவந்தியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் கடந்த 2020-21ம் கல்வியாண்டு துவங்கப்பட்டு, அரியலுாரில் தற்காலிக கட்டடத்தில் இயங்கியது. கல்லுாரியில் பி.ஏ., தமிழ், பொருளாதாரம், வணிகவியல், பி.எஸ்.சி., கணினி அறிவியல், புள்ளியியல் ஆகிய 5 பாடப்பிரிவுகள் உள்ளன. சங்கராபுரம், பகண்டைகூட்ரோடு, தியாகதுருகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராம பகுதிகளை சேர்ந்த 800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்லுாரியில் படிக்கின்றனர். இக்கல்லுாரிக்கான நிரந்தர கட்டடம் பாவந்துாரில் கட்டப்பட்டு, கடந்த அக்., 29ம் தேதி பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.சங்கராபுரம் மற்றும் தியாகதுருகம் பகுதிகளில் இருந்து பாவந்துாரில் உள்ள கல்லுாரி கால நேரத்திற்கு சென்று, வருவதற்கேற்ப அரசு பஸ் வசதி இல்லை. இதனால், சங்கராபுரம் பஸ்நிலையத்தில் இருந்து காலை 8.30 மணிக்கு புறப்படும் தனியார் பஸ்சில், மாணவ, மாணவிகள் ரூ.30 கட்டணம் செலுத்தி கல்லுாரிக்கு செல்கின்றனர். அதேபோல், தியாகதுருகம் பகுதியை சேர்ந்த மாணவ, மாணவிகள் தனியார் பஸ் மற்றும் ஆட்டோவில் ரூ.15 கட்டணம் செலுத்தி கல்லுாரிக்கு வருகின்றனர்.மதியம் 2.30 மணிக்கு வகுப்புகள் முடியும் நிலையில், மாலை 3 மணியளவில் வரும் தியாகதுருகத்தில் இருந்து சங்கராபுரம் செல்லும் அரசு பஸ்சில் முண்டியடித்துக்கொண்டு செல்கின்றனர். ஒரு பஸ் மட்டுமே இருப்பதால் கூட்டநெரிசலில் ஆபத்தான முறையில் மாணவர்கள் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை கல்லுாரிக்கு அனுப்பிவிட்டு அச்சத்தில் இருருக்கும் நிலை உள்ளது. அரசு பஸ்சில் பயணிக்க முடியாதவர்கள், மீண்டும் தனியார் பஸ் அல்லது ஆட்டோவில் செல்கின்றனர். இதனால் சங்கராபுரம் பகுதியை சேர்ந்த மாணவர்களுக்கு தினமும் ரூ.60, தியாகதுருகம் பகுதியை சேர்ந்த மாணவர்களுக்கு ரூ.30 செலவாகிறது. அரசு பஸ் இல்லாததால், இலவச பயண அட்டை இருந்தும் அதை பயன்படுத்த முடியவில்லை.எனவே, தியாகதுருகம் மற்றும் சங்கராபுரத்தில் இருந்து கல்லுாரி வேலை நேரத்திற்கேற்ப காலை, மதியம் வேலைகளில் அரசு பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டுமென மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி