உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / இலக்கை நோக்கி பயணித்தால் தான் வெற்றி கிட்டும்; இந்திய கிரிக்கெட் அணி வீரர் நடராஜன் உருக்கம்

இலக்கை நோக்கி பயணித்தால் தான் வெற்றி கிட்டும்; இந்திய கிரிக்கெட் அணி வீரர் நடராஜன் உருக்கம்

திருக்கோவிலுார்: நீ என்னவாக வேண்டும் என நினைக்கிறாயோ, அதற்காக இப்பொழுது இருந்தே இலக்கை நோக்கி பயணித்தால் தான் வெற்றி கிட்டும் என இந்திய கிரிக்கெட் அணி வீரர் நடராஜன் பேசினார். திருக்கோவிலுார் ஞானானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் விளையாட்டு விழா நடந்தது. பள்ளியின் தாளாளர் முகில் வண்ணன் தலைமை தாங்கினார். இந்திய கிரிக்கெட் அணி வீரர் நடராஜன் சிறப்பு விருந்தினராக ப ங்கேற்று பேசியதாவது; பெற்றோர்கள் தங்கள் உடல் நலனை பேணி காக்க வேண்டும். அப்பொழுதுதான் உங்கள் கனவை நோக்கி பிள்ளைகளை அழைத்து செல்ல முடியும். மாணவர்களாகிய நீங்களும் பெற்றோர்களின் கனவை உணர்ந்து உங்களுக்கு படிப்பில் ஆர்வமா? அல்லது விளையாட்டில் ஆர்வமா என்பதை தெளிவு படுத்துங்கள். கூடவே உங்கள் பெற்றோர்களும் வருவார்கள். இதை இன்றைய காலகட்டத்தில் கண்கூடாக பார்க்க முடிகிறது. அவர்களின் வேலைகளை விட்டுவிட்டு உங்களுக்காக நேரத்தை செலவழிக்கிறார்கள். அந்த அளவிற்கு பெற்றோர்கள் உதவியாக இருக்கிறார்கள் என்றால் உங்களுடைய இலக்கை நோக்கி கடுமையாக பயணிக்க வேண்டும். உங்கள் வளர்ச்சி தான் பெற்றோர்களின் ஆசையாக இருக்கிறது. தற்பொழுது அனைத்து துறைகளிலும் வாய்ப்புகள் நிறைய உள்ளது. அது படிப்பாக இருந்தாலும் சரி, விளையாட்டாக இருந்தாலும். நீ என்னவாக வேண்டும் என நினைக்கிறாயோ, இப்பொழுது இருந்தே இலக்கை நோக்கி பயணித்தால் தான் வெற்றி கிட்டும். அதுவும் உடனே கிடைத்துவிடும் என நினைக்கக் கூடாது. அதற்கு கடுமையான முயற்சிக்க வேண்டும், அதுவும் நெடிய பயணத்திற்கு பிறகே கிடைக்கும். நான் எளிய குடும்ப பின்னணியில் இருந்து வந்தவன். எனக்கு பயிற்சி எடுக்க நல்ல கிரவுண்ட் இல்லை. வெறும் காலில் தான் ஓடுவேன், இன்னும் சொல்லப்போனால் நல்ல சாப்பாடுகூட கிடையாது. அதுபோன்ற சூழ்நிலையில் இருந்த என்னால் இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாட முடிகிறது என்றால், உங்களுக்கு எல்லா வசதியும் இங்கு கிடைக்கிறது. நீங் கள் முயன்றால் எவ்வளவு துாரத்திற்கு வேண்டுமானாலும் செல்லலாம். என்னால் முடியும் என நீ நம்பினால் மட்டுமே இது சாத்தியம். ஒரு இலக்கை நோக்கி செல்லும் பொழுது நிறைய தடங்கள் வரும். சில நேரங்களில் இது முடியாது விட்டு விட்டு சென்று விடலாம் என்று கூட நினைக்கலாம். அது போன்ற சூழலில் தன்னம்பிக்கையும், தைரியமும் இருந்தால் மட்டுமே அடுத்த நிலைக்கு செல்ல முடியும். இது அவசியம். அந்த காலத்தில் பள்ளி முடிந்தவுடன் பிள்ளைகள் வீட்டிற்கு சென்று விளையாட துவங்கி விடுவார்கள். ஆனால் இன்று அப்படி இல்லை வீடியோ கேம், டி.வி., பார்க்க உட்கார்ந்து விடுகிறார்கள். இதனால் உடல்நிலை பாதிக்கிறது. வாழ்க்கையில் எந்த உயர்நிலைக்கு சென்றாலும் தன்னடக்கத்தை விட்டு விடக்கூடாது. தன்னடக்கத்துடன் நன்றி மறவாமல் இருக்க வேண்டும். தன்னால் முடிந்த அளவிற்கு மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். இவ்வாறு பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை