திருக்கோவிலுார் ஆற்று திருவிழா நடத்துவதில் திடீர் குழப்பம்
திருக்கோவிலுார்: திருக்கோவிலூர் ஆற்று திருவிழாவில் விழுப்புரம் மாவட்ட எல்லையில் சுவாமி வரும் பாதை அடைக்கப்பட்டதால் பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆற்றில் பொங்கல் விழாவின் 5ம் நாள் தீர்த்த வாரி, ஆற்று திருவிழா நடைபெறுவது வழக்கம். இதில் திருக்கோவிலூர் ரெட்டை விநாயகர், வீரட்டானேஸ்வரர், அரகண்டநல்லூர் மற்றும் வீரபாண்டி அதுல்ய நாதேஸ்வரர், தேவனூர் பெருமாள் உள்ளிட்ட சுவாமிகள் எழுந்தருளி தீர்த்தவாரி வைபவம் முடிந்து, பக்தர்களுக்கு அருள் பாலிப்பது வழக்கம்.மாவட்ட பிரிப்பின் காரணமாக தென்பெண்ணையாற்றில் மேடை அமைக்கும் பகுதி விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லையில் இடம்பெறுகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், திருக்கோவிலூர் தாலுகா அலுவலகத்தில் நடந்தது. இதில் விழா நடத்த தடையில்லை எனவும், பாதுகாப்பான வகையில் நடத்துவது குறித்து நேரடி கள ஆய்வு மேற்கொண்டு முடிவு செய்தனர்.எனினும் விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து சரியான எந்த முடிவும் எடுக்கவில்லை. இச்சூழலில் நேற்று காலை ஆற்றுத் திருவிழா நடைபெறும் பகுதிக்கு வரும் அரகண்டநல்லூர் பகுதியில் தரைப்பாலம், தேவனூர் பம்பவுஸ், மணபூண்டி சுடுகாட்டு பாதை பகுதிகளில் தடுப்புகளை ஏற்படுத்தி போலீசாரும், வருவாய்த் துறையினரும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி ஆற்றில் இறங்கக் கூடாது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருப்பதாக கூறினர்.இதற்கு தேவனூர் பகுதியைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சுவாமியை திருவிழாவிற்கு எந்த வழியில் எடுத்துச் செல்வது என்ற கேள்வியையும் முன் வைத்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் விழாவை நடத்த ஏற்பாடு செய்து வரும் நிலையில் விழுப்புரம் மாவட்ட அதிகாரிகள் தடை விதிப்பது எந்த விதத்தில் நியாயம் என்று பொது மக்கள் தரப்பில் கேட்கின்றனர்.மாவட்ட எல்லை இரண்டாக இருந்தாலும், ஒரே தொகுதி தான் என்ற நிலையில், மக்கள் பிரதிநிதிகள் தலையிட்டு குழப்பத்திற்கு தீர்வு கண்டிருக்கலாம். ஆனால் எதையுமே கண்டு கொள்ளாமல் ஒதுங்கி இருப்பதாக பொது மக்கள் தரப்பில் குற்றம் சாட்டுகின்றனர்.