மேலும் செய்திகள்
விஜயதசமி தினத்தில் அரசு பள்ளிகளில் 66 பேர் சேர்க்கை
20 hour(s) ago
பொது விநியோக திட்ட பொருட்கள் முன்கூட்டியே விநியோகம்
20 hour(s) ago
மது பாட்டில் விற்றவர் கைது
23 hour(s) ago
சின்னசேலத்தில் கும்ப கலச பூஜை
02-Oct-2025
கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், ரிஷிவந்தியம், ஆத்துார், கெங்கவல்லி, ஏற்காடு ஆகிய 6 சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கிய கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி கடந்த 2008ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.கடந்த 2009 லோக்சபா தேர்தலில் தி.மு.க., வேட்பாளராக களம் இறங்கிய ஆதிசங்கர் 3 லட்சத்து 63 ஆயிரத்து 601 ஓட்டுகள் பெற்று எம்.பி., யாக தேர்வு செய்யப்பட்டார். அ.தி.மு.க., கூட்டணி சார்பில் போட்டியிட்ட பா.ம.க., வேட்பாளர் தன்ராஜ் 2 லட்சத்து 54 ஆயிரத்து 993 ஓட்டுகள் பெற்று 2ம் இடமும், தனித்து களம் கண்ட தே.மு.தி.க., வேட்பாளர் சுதீஷ் ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 223 ஓட்டுகள் பெற்று 3ம் இடமும் பெற்றனர்.அதைத் தொடர்ந்து 2014ம் ஆண்டு நடந்த தேர்தலில் தனித்து களம் கண்ட அ.தி.மு.க., வேட்பாளர் காமராஜ் 5 லட்சத்து 33 ஆயிரத்து 383 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.தி.மு.க., வேட்பாளர் மணிமாறன் 3 லட்சத்து 9 ஆயிரத்து 876 ஓட்டுகள் பெற்று 2ம் இடமும், தே.மு.தி.க., வேட்பாளர் ஈஸ்வரன் ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 183 ஓட்டுகள் பெற்று 3ம் இடம் பெற்றனர்.கடந்த 2019ம் ஆண்டு நடந்த தேர்தலில் தி.மு.க., கவுதம சிகாமணி 7 லட்சத்து 21 ஆயிரத்து 713 ஓட்டுகள் பெற்று சிட்டிங் எம்.பி.,யாக உள்ளார். அ.தி.மு.க., கூட்டணியில் போட்டியிட்ட தே.மு.தி.க., சுதீஷ் 3 லட்சத்து 21 ஆயிரத்து 794 ஓட்டுகள் பெற்று 2ம் இடமும், அ.ம.மு.க., கோமுகி மணியன் 50 ஆயிரத்து 179 ஓட்டுகள் பெற்று 3ம் இடமும் பிடித்தார்.தற்போதைய நிலவரப்படி இத்தொகுதியில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில் சங்கராபுரம், ரிஷிவந்தியம் ஆகிய இரு தொகுதிகள் மட்டுமே தி.மு.க., வசம் உள்ளது. மற்ற 4 தொகுதிகளும் அ.தி.மு.க., வசம் உள்ளது.கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதிக்குட்பட்ட 6 சட்டசபை தொகுதிகளில், 7 லட்சத்து 68 ஆயிரத்து 729 ஆண்கள், 7 லட்சத்து 89 ஆயிரத்து 794 பெண்கள், மூன்றாம் பாலினம் 226 என மொத்தம் 15 லட்சத்து 58 ஆயிரத்து 749 வாக்காளர்கள் உள்ளனர்.வரும் தேர்தலில் கள்ளக்குறிச்சியில் நேரடியாக களம் காண தி.மு.க., தலைமை விரும்புவதாக தெரிகிறது. சிட்டிங் எம்.பி., கவுதம சிகாமணி, பொதுக்குழு உறுப்பினர் மணிமாறன், அமைச்சர் வேலுவின் மகன் கம்பன், முன்னாள் எம்.எல்.ஏ., அங்கையற்கண்ணி, சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் சிவலிங்கம், தியாகதுருகம் நகர செயலாளர் மலையரசன் ஆகியோர் தி.மு.க., வில் சீட் பெற முயற்சி எடுத்து வருகின்றனர்.கூட்டணி கட்சியான காங்., மற்றும் வி.சி., ஆகிய கட்சிகள் இத்தொகுதியை கேட்டுப் பெற பெரும் முயற்சி எடுத்து வருகிறது. கடந்த தேர்தலில் 7 லட்சத்து 21 ஆயிரத்து 713 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றதால் மீண்டும் இத்தொகுதியில் போட்டியிடவே தி.மு.க., விரும்பும். அதேபோல் அ.தி.மு.க., இத்தொகுதியில் நேரடியாக களம் காணுவது உறுதியாக தெரிகிறது. இத்தொகுதியில் உள்ள 6ல் 4 சட்டசபை தொகுதிகள் அ.தி.மு.க., வசம் உள்ளதால் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையோடு களம் இறங்க உள்ளது.இக்கட்சியில் முன்னாள் எம்.பி., காமராஜ், கள்ளக்குறிச்சி ஒன்றிய செயலாளர் ராஜசேகர், சேலம் மாவட்டத்தில் மூத்த நிர்வாகி ராமசாமி ஆகியோர் சீட் கேட்கின்றனர்.அதேபோல் தற்போது பா.ஜ.,விலும் சிறுபான்மையினர் அணி மாநில பொருளாளர் ஸ்ரீசந்த், ஓ.பி.சி., அணி மாநிலச் செயலாளர் செல்வநாயகம் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் போட்டியிட ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கிடையே பா.ஜ., கூட்டணியில் இணைந்து இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பச்சமுத்து கள்ளக்குறிச்சி தொகுதியில் களம் காண உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. கடந்த 2009ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., போட்டியிட்ட நிலையில் வரும் தேர்தலில் தனித்து களம் காணபோகிறதா அல்லது கூட்டணியில் அங்கம் வகித்து கட்சியின் முக்கிய பிரமுகர்களை கொண்டு போட்டியிடும் வாய்ப்புகளும் உள்ளது என கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசப்படுகிறது. அதேபோல் தே.மு.தி.க., தனித்து களம் காணப்போகிறதா அல்லது கூட்டணியில் இணைந்து போட்டியிடப் போகிறதா என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை. விஜயகாந்துக்கு செல்வாக்கு அதிகம் உள்ள இத்தொகுதியில் அவர் சமீபத்தில் இறந்த நிலையில் அனுதாபம் அதிகரித்துள்ளது.இச்சூழலில் மக்களின் ஆதரவு அதிகம் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா அல்லது அவரது மகன் பிரபாகரன் களம் இறங்குவர் என்ற பேச்சு அடிபடுகிறது.மற்றபடி கூட்டணி உறுதியான பின்னரே முழுமையான நிலவரம் தெரியவரும். இச்சூழ்நிலையில் அதற்குள்ளாகவே கள்ளக்குறிச்சி தேர்தல் களம் மெல்ல சூடு பிடிக்க துவங்கியுள்ளது.
20 hour(s) ago
20 hour(s) ago
23 hour(s) ago
02-Oct-2025