மேலும் செய்திகள்
'தமிழ் கனவு' நிகழ்ச்சி
08-Nov-2025
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் கல்லுாரி மாணவர்களுக்கான தமிழ்க் கனவு நிகழ்ச்சி நடந்தது. கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., கல்வியியல் கல்லுாரியில் தமிழ் மரபு மற்றும் பண்பாடுகளை இளைஞர்களிடையே சேர்க்கும் வகையில் தமிழ் கனவு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கி துவக்கி வைத்து, தமிழ் கனவு நிகழ்ச்சியை மாணவ மாணவிகள் உரிய முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார். டி.ஆர்.ஓ., ஜீவா, ஏ.கே.டி., கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பேராசிரியர் ஆறுமுகத்தமிழன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கற்றதனால் பெற்ற பயன் என்ற தலைப்பில் பேசினார். மேலும் தமிழ் மரபு, நாகரிகம், தமிழின் சிறப்பு, இலக்கிய செழுமை, தமிழின் தொன்மை, சமூக சமத்துவம், மகளிர் மேம்பாடு, தொல்லியல் ஆய்வுகள், தொழில் வளர்ச்சி, கல்வி புரட்சி உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளின் கீழ் சொற்பொழிவு நடந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்பு வழிகாட்டி கையேடு, தமிழ்ப் பெருமிதம் கையேடு வழங்கப்பட்டது. தொடர்ந்து மாணவர்களுக்கு பெருமிதச் செல்வன், பெருமிதச் செல்வி, கேள்வியின் நாயகன், கேள்வி நாயகி ஆகிய விருதுகள் வழங்கப்பட்டது. மேலும் உயர்கல்வி, வேலை வாய்ப்பு, வங்கி கடனுதவி, தொழில் வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ளும் வகையிலான பல்வேறு அரங்குகள் அமைக்கப்பட்டது. புத்தக காட்சி அரங்கங்களும் அமைக்கப்பட்டன. இதில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ரஞ்சித், மாவட்ட பொறுப்பாளர் தர்மராஜா, பேராசிரியர் பச்சியப்பன் மற்றும் மாணவ, மாணவிகள் உட்பட பலர் பங்கேற்றனர். கல்லுாரி முதல்வர் பருவதஅரசி நன்றி கூறினார்.
08-Nov-2025