டேங்கர் லாரி டிரைவர்கள் வேலை நிறுத்த போராட்டம்
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை சிப்காட்டில் டேங்கர் லாரி டிரைவர்கள் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலுார் மாவட்டம், கோவிலுார் பகுதியைச் சேர்ந்தவர் செல்வபிரபு, 42; டிரைவர். உளுந்துார்பேட்டை அடுத்த ஆசனுார் சிப்காட்டிலுள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் இருந்து டேங்கர் லாரியில் பெட்ரோல் ஏற்றிக் கொண்டு சென்னை ராயபேட்டை சென்றார். அங்கு பெட்ரோலை இறக்கிவிட்டு லாரியில் துாங்கிக் கொண்டிருந்தார். கடந்த 17ம் தேதி காலை 3:00 மணிக்கு திடீரென செல்வபிரபுவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதனையறிந்த டேங்கர் லாரி டிரைவர்கள், இறந்த செல்வ பிரபுவுக்கு காப்பீட்டு தொகை வழங்கவேண்டும் என கூறி நேற்று காலை 6:00 மணிக்கு சிப்காட் ஆயில் நிறுவனத்திற்குள் செல்லாமல் 130 டேங்கர் லாரிகளை நிறுத்திவிட்டு வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நிறுவன மேலாளர் சந்தோஷ் மற்றும் எடைக்கல் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். டேங்கர் லாரி ஓட்டும்போது விபத்து ஏற்பட்டால், இழப்பீடு வழங்க முடியும். சாதாரண மரணத்திற்கு ஆயுள்காப்பீடு வழங்க முடியாது என கூறினர். இருப்பினும் நிறுவனத்தின் மூலம் இழப்பீடு தொகை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். அதனைத் தொடர்ந்து காலை 9:00 மணிக்கு வேலை நிறுத்தம் போராட்டத்தை கைவிட்டு டேங்கர் லாரிகளை இயக்கினர்.