உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  தென்பெண்ணை ஆறு கூவமாக மாறும் அவலம்: மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கை தேவை

 தென்பெண்ணை ஆறு கூவமாக மாறும் அவலம்: மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கை தேவை

திருக்கோவிலுார்: தென்பெண்ணை ஆற்றில் கழிவு நீர் கலந்து சென்னை கூவம் நதி போல் காட்சியளிப்பதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள்,விவசாயிகள் கோரிக்கை விடுத்துவருகின்றனர். வற்றாத ஜீவ நதியாக போற்றப்பட்ட தென்பெண்ணை ஆறு கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை வற்றாமல் ஓடிக்கொண்டிருந்தது. தற்பொழுது வறண்ட பாலைவனமாக மட்டுமல்ல கழிவு நீர் கலக்கும் கூவமாகவும் மாறி இருக்கிறது.தென்பெண்ணை ஆறு கர்நாடக மாநிலம் நந்தி துர்க்கா மலையில் உருவெடுத்தாலும், கள்ளக்குறிச்சி மாவட்டம், மூங்கில்துறைபட்டில் இருந்துதான் மணல் மிகுந்த பகுதியாக பாய்ந்தோடி, கடலுாரில் வங்க கடலில் கலக்கிறது. கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்ட விவசாயிகளுக்கு மட்டுமல்லாது பொது மக்களின் தாகம் தீர்க்கும் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. எனவே இதன் நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்க வேண்டிய சூழலில், அரசு ஆங்காங்கே மணல் குவாரிகளை அமைத்து பல மீட்டர் ஆழத்திற்கு மண்ணை, மணல் மாபியாக்கள் சுரண்டி எடுத்து விட்டதால், நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக குறைந்து பாலைவனமாக மாறி வருகிறது. மழை பெய்தால், ஒன்று இரண்டு மாதங்கள் ஆற்றில் தண்ணீர் வரும் நிலையில், அதன் தூய்மையை பாதுகாக்கும் அவசியத்தை உணராமல் மக்கள் கழிவு நீரை தென்பெண்ணையில் விடுகின்றனர். இதனால் ஏற்படும் விளைவுகளை உணந்த அதிகாரிகளும் கண்டும் காணதது போல் இருந்துவருகின்றனர். இதற்கு முக்கிய எடுத்துகாட்டு என்றால் திருக்கோவிலுார் பஸ் ஸ்டாண்ட் அருகே தென்பெண்ணை ஆற்றில் சாக்கடை நீர் வழிந்தோடி ஆற்றில் கலக்கும் அவலம். இந்த இடத்தில்தான் தீர்த்தவாரி படித்துறை அமைந்திருந்தது. பிரம்மோற்சவ காலங்களில் இங்கு தீர்த்தவாரி வைபவம் நடப்பது வழக்கம். ஆனால் இன்று நிலைமை தலைகீழாகி விட்டது. நதிக்கரை பல மீட்டர் துாரம் ஆக்கிரமிக்கப்பட்டு, குப்பைகள் கொட்டி மேடாகி, பன்றிகள் வளர்க்கும் பண்ணையாக மாற்றப்பட்டிருக்கிறது. பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இந்த ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்ற சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டும் அதிகாரிகள் ஆக்கிரமிப்பாளர்களுக்கு துணை போகின்றன. இதன் காரணமாக கழிவுநீர்ஆற்றில் கலந்து புனிதமான தென்பெண்ணை ஆறு மாக சிறுக சிறுக மாறி வருகிறது. இந்த அவளத்தை போக்க திருக்கோவிலுார் நகராட்சி மட்டுமல்லாது, நதிக்கரையில் இரண்டு பகுதியிலும் இருக்கும் நகரம் மற்றும் கிராம பகுதி நிர்வாகம் கழிவுநீர் ஆற்றில் கலப்பதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இதற்கு பொதுப்பணித்துறையின் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியம். ஆற்றில் அரசு அனுமதி என்ற பெயரில் விதிகளுக்கு புறம்பாக பல மீட்டர் ஆழத்திற்கு மண் எடுப்பதற்கும், ஏரியை கபளீகரம் செய்யும் சமூக விரோத கும்பலுக்கு துணை போவதையும் நிறுத்திவிட்டு, நிலத்தடி நீர்மட்டம் மேம்பாட்டு கூட்டு குடிநீர் திட்டங்கள் தொடர்ந்து இயங்கவும், ஆறு கூவமாக மாறும் அவலத்தை போக்கவும், பொதுப்பணி துறையின் கடுமையான நடவடிக்கை அவசியம். இதனை வலியுறுத்தி தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டியது மாவட்ட நிர்வாகத்தின் கடமையாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை