மனைவி, அவரது கள்ளக்காதலன் தலையை துண்டித்து கொன்ற கணவன் பையில் வைத்து தலைகளுடன் சிறை சென்ற கொடூரம்
கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி அருகே மனைவி, அவரது கள்ளக்காதலனை தலை துண்டித்து கொடூரமாக கொலை செய்த கணவர், வேலுார் மத்திய சிறையில் சரணடைய, கட்டைப்பையில் வைத்து இரு தலைகளையும் கொண்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கள்ளக்குறிச்சி அடுத்த மலைக்கோட்டாலம் கிராமத்தை சேர்ந்தவர் கொளஞ்சி, 60; கூலி தொழிலாளி. இவரது முதல் மனைவி கலியம்மாள். இவர்களுக்கு ஐந்து பிள்ளைகள். இரண்டாவது திருமணம்
பல ஆண்டுகளுக்கு முன் கணவரை பிரிந்து மூன்று பிள்ளைகளுடன் தனியாக வசித்த கலியம்மாள், சில ஆண்டுகளுக்கு முன் இறந்தார். இதற்கிடையே, கொளஞ்சி, நாட்டார்மங்கலத்தை சேர்ந்த லட்சுமி, 40, என்பவரை இரண்டாவது திருமணம் செய்தார். இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். நேற்று காலை கொளஞ்சி வீட்டு மொட்டை மாடியில், லட்சுமி மற்றும் 55 வயது ஆண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்ட நிலையில், உடல்கள் மட்டும் ரத்த வெள்ளத்தில் கிடந்தன. கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி., தங்கவேல் தலைமையிலான போலீசார் விசாரித்தனர். மொபைல் போன் ஒன்று அங்கு இருந்தது. அதை கைப்பற்றி விசாரித்ததில், இறந்த நபர் அதே ஊரை சேர்ந்த தங்கராசு, 57, என, தெரிந்தது. தங்கராசுக்கும், லட்சுமிக்கும் கள்ளக்காதல் இருந்துள்ளது. கொளஞ்சி வெளியூர் வேலைக்கு சென்ற போது, லட்சுமி கள்ளக்காதலுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இது தெரிந்து, கொளஞ்சி இருவரையும் கண்டித்துள்ளார். இருப்பினும், அவர்கள் கள்ளக்காதலை தொடர்ந்தனர். இதில் ஆத்திரம் அடைந்த கொளஞ்சி, இருவரையும் கொல்ல முடிவு செய்துள்ளார். நேற்று முன்தினம் இரவு கொளஞ்சி வெளியூர் வேலைக்கு செல்வதாக மனைவியிடம் கூறிவிட்டு, அங்கேயே ஒரு இடத்தில் மறைந்திருந்தார். இது தெரியாமல், லட்சுமி, தங்கராசுவை மொபைல் போனில் அழைத்து வீட்டின் மொட்டை மாடிக்கு வருமாறு தகவல் தெரிவித்தார். அக்கம் பக்கத்தினர் துாங்கிய பின், தங்கராசு, லட்சுமி வீட்டின் மொட்டை மா டிக்கு சென்றுள்ளார். இதை மறைந்திருந்து நோட்டமிட்ட கொளஞ்சி, கத்தியுடன் மொட்டை மாடிக்கு சென்றுள்ளார். அங்கு, இருவரும் உல்லாசமாக இருப்பதை பார்த்த ஆத்திரத்தில், தங்கராசு, லட்சுமி இருவரையும் சரமாரியமாக வெட்டி கொலை செய்துள்ளார். பெரும் பரபரப்பு
பின், இருவரின் தலைகளையும் துண்டாக்கிய கொளஞ்சி, அந்த தலைகளை பாலித்தீன் பையில் அடைத்து, கட்டை பையில் வைத்து, மொபட்டில் கள்ளக் குறிச்சி பஸ் ஸ்டாண்டிற்கு எடுத்துச் சென்றார். அங்கு அரசு பஸ் ஏறி, வேலுார் வரை பயணித்துள்ளார். பின், வேலுார் மத்திய சிறைக்கு சென்று, அங்கிருந்த சிறை காவலர்களிடம், தலையை எடுத்து கொடுத்து, சரணடைய வந்ததாக தெரிவித்துள்ளார். கிறுகிறுத்து போன போலீசார், அவரை பிடித்து கள்ளக்குறிச்சி, வரஞ்சரம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். கள்ளக்காதல் விவகாரத்தால் இருவர் தலை துண்டித்து கொடூரமாக கொலை செய்யப் பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.