உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஆற்றில் கரை புரண்ட வெள்ளத்தால் 2 ஆண்டாக வறண்டு கிடக்கும் ஏரி

ஆற்றில் கரை புரண்ட வெள்ளத்தால் 2 ஆண்டாக வறண்டு கிடக்கும் ஏரி

திருக்கோவிலுாரில் 95 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரி மூலம் 800 ஏக்கர் விளை நிலங்கள் நேரடியாக பாசன வசதி பெறுகிறது. மேலும், இந்த ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர் மூலம் கச்சிக்குச்சான், ஆவிகொளப்பாக்கம், காட்டுப்பையூர் என 7 ஏரிகள் நிரம்பி பாசன வசதி பெறுகிறது.தென்பெண்ணையில் சிறிதளவு தண்ணீர் வந்தால் கூட ஆற்று வாய்க்கால் வழியாக ஏரிக்கு தண்ணீர் வந்து, ஏரி எப்பொழுதும் நீர் நிரம்பி கடல் போல் காட்சி அளிக்கும்.விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ள இந்த ஏரிக்கான ஆற்று வாய்க்கால் முடியனூர் தென்பெண்ணை ஆற்றில் இருந்து துவங்கி 7 கி.மீ., பயணிக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் ஆற்று வாய்க்காலில் மணல் நிரம்பி துார்ந்து போனது. அத்துடன் வாய்க்காலுக்கு தண்ணீர் வரும் வகையில் ஆற்றில் கட்டப்பட்டிருந்த தடுப்புச் சுவர் இடிந்து விட்டது.இதன் காரணமாக ஆற்றில் மாதக்கணக்கில் தண்ணீர் சென்றாலும் ஏரிக்கு தண்ணீர் வருவது சிரமம் என்ற நிலை தான் உள்ளது.தற்பொழுது ஏரி முற்றிலும் வறண்டு விட்ட நிலையில், எதிர்வரும் வடகிழக்கு பருவமழை காலத்தில் ஆற்றில் தண்ணீர் வந்தால், அதனை ஏரிக்கு திருப்பி விடுவது என்பது எட்டாக்கனியானயாகி உள்ளது.எனவே ஏரி முற்றிலுமாக மழையையே நம்பி இருக்க வேண்டிய சூழலில், மழை பொய்த்துப் போனால் ஆற்றில் வரும் தண்ணீரைக் கொண்டு ஏரியை நிரப்புவதன் மூலம் நகரில் நிலத்தடி நீர்மட்டம் மேம்படும், அத்துடன் விவசாயமும் செழிக்கும்.ஏரி தண்ணீரை நம்பி ரூ. 2.50 கோடி மதிப்பீட்டில் தெப்பக்குளம், தீர்த்த குளங்களுக்கு பாதாள குழாய் பதிக்கப்பட்டு வரும் நிலையில், ஏரி வறண்டு போனால் இத்திட்டம் முடங்கும் அபாயம் உள்ளது.பொதுப்பணித்துறை துார்ந்து போன ஏரிவாய்க்காலை போர்க்கால அடிப்படையில் சீரமைத்து, ஏரிக்கு தண்ணீர் வர துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ