கடந்தாண்டு மார்க்கெட் கமிட்டிகளில் மொத்த விற்பனை ரூ.204 கோடி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வியாபாரிகள் நேரடி கொள்முதல்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில், உளுந்துார்பேட்டை, கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், சின்னசேலம், தியாகதுருகம், மணலுார்பேட்டையில் மார்க்கெட் கமிட்டிகள் இயங்கி வருகின்றன. கண்காணிப்பாளர்கள் நிர்வகித்து வரும் இந்த கமிட்டிகளை விழுப்புரம் வேளாண் விற்பனைக்குழு செயலாளர் சந்துரு கண்காணிப்பில் செயல்பட்டு வருகிறது. கமிட்டிகளில் விவசாயிகள் கொண்டு வரும் விளை பொருட்கள் தரம் பிரித்து விற்பனைக்கு தயார் செய்யப்படுகின்றன. அதனை பதிவு செய்த வியாபாரிகள் பொருட்களின் தரத்திற்கு ஏற்றவாறு விலை நிர்ணயம் செய்யும் நிலையில் கமிட்டி கண்காணிப்பாளர்கள் மூலமாக அதற்கான விலை பட்டியல் வெளியிடப்படுகிறது.விலை கட்டுப்படியாகும் விவசாயிகள் அனுமதியுடன், அதனை தேர்வு செய்யும் வணிகர்களுக்கு கமிட்டி மூலம் விற்பனை செய்யப்படுகிறது. கொள்முதல் செய்யப்பட்ட பொருட்களுக்கான தொகை ஆன்லைன் வழியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகின்றன. கடந்தாண்டு மக்காச்சோளம், நெல், எள், உளுந்து, கம்பு போன்ற உயர்விளைச்சல் பயிர்கள் அதிகளவு வரத்து இருந்துள்ளது. சேலம், கோயம்புத்துார், விழுப்புரம் உள்ளிட்ட வெளி மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் நேரில் வந்து விலை நிர்ணயம் செய்து வர்த்தகம் செய்கின்றனர்.கடந்தாண்டு அதிகப்படியாக நெல், மக்காச்சோளம் பயிர்களை அதிகளவில் வரத்து இருந்துள்ளது. உளுந்துார்பேட்டை கமிட்டிக்கு 7,244 விவசாயிகள் கொண்டுவந்த ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 351 மூட்டை நெல் உள்ளிட்ட 2 லட்சத்து 19 ஆயிரத்து 170 மூட்டை விளைபொருட்கள் 92 கோடியே 25 லட்சத்து 48 ஆயிரத்து 898-க்கு விற்பனையானது. கள்ளக்குறிச்சி கமிட்டிக்கு 4,568 விவசாயிகள் கொண்டு வந்த 47 ஆயிரத்து 190 மூட்டை மக்காச்சோளம் உள்ளிட்ட 98 ஆயிரத்து 810 மூட்டை விளைபொருட்கள் 71 கோடியே 18 லட்சத்து 38 ஆயிரத்து 700-க்கு விற்பனையானது.தியாகதுருகம் கமிட்டிக்கு 3,074 விவசாயிகள் கொண்டு வந்த 29 ஆயிரத்து 769 மூட்டை நெல் உள்ளிட்ட 51 ஆயிரத்து 638 மூட்டை விளைபொருட்கள் ரூ.26 கோடியே 23 லட்சத்து 6 ஆயிரத்து 271-க்கு விற்பனையானது. மணலுார்பேட்டை கமிட்டிக்கு 1,761 விவசாயிகள் கொண்டு வந்த 16 ஆயிரத்து 044 மூட்டை நெல் உள்ளிட்ட 29 ஆயிரத்து 078 மூட்டை விளைபொருட்கள் ரூ.8 கோடியே 40 லட்சத்து 45 ஆயிரத்து 754-க்கு விற்பனையானது. சின்னசேலம் கமிட்டியில் 1,038 விவசாயிகள் கொண்டு வந்த 12 ஆயிரத்து 783 மூட்டை மக்காச்சோளம் உள்ளிட்ட 15 ஆயிரத்து 686 மூட்டை விளைபொருட்கள் ரூ.4 கோடியே 37 லட்சத்து 14 ஆயிரத்து 750-க்கு விற்பனையானது. சங்கராபுரம் கமிட்டியில் 2,979 விவசாயிகள் கொண்டு வந்த 41 ஆயிரத்து 733 மூட்டை மக்காச்சோளம் உள்ளிட்ட 68 ஆயிரத்து 893 மூட்டை விளைபொருட்கள் ரூ.ஒரு கோடியே 57 லட்சத்து 2 ஆயிரத்து 349-க்கு விற்பனையானது.அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 6 கமிட்டிகளில் கடந்த 2024 ஜன.1 முதல் டிச.31 வரையில் மொத்தம் 99 ஆயிரத்து 049 விவசாயிகள் கொண்டு வந்த 4 லட்சத்து 83 ஆயிரத்து 275 மூட்டை விளை பொருட்கள் மொத்தம் ரூ.204 கோடியே ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 722க்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளனர்.