கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டிகளில் வர்த்தகம்... ரூ. 88.46 கோடி: 20,754 மெட்ரிக் டன் விளைபொருட்கள் கொள்முதல்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 7 மார்க்கெட் கமிட்டிகளில் நடப்பாண்டு ஏப். முதல் ஆக. வரையிலான காரீப் பருவ அறுவடை காலத்தில் மொத்தம் 47,416 விவசாயிகள் கொண்டு வந்த 20,754 மெட்ரிக் டன் வேளாண் விளைபொருட்கள் ரூ.88.46 கோடிக்கு வர்த்தகம் செய்யப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்ட பகுதி மக்கள் கோமுகி, மணிமுக்தா ஆகிய இரு அணைகளின் நீர்வரத்து மூலமாக விவசாயத்தை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். இங்கு கரும்பு, நெல், உளுந்து, வேர்கடலை, எள், கம்பு, மக்காசோளம், கேழ்வரகு ஆகிய பயிர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. தேசிய சந்தைப்படுத்தும் இ-நாம் முறை மற்றும் நேரடி வர்த்தகர்களின் உரிய விலை நிர்ணயம் போன்ற காரணங்களினாலும், தங்களின் விளைபொருட்களுக்கு உரிய தொகை உடன் கிடைக்கும் என்ற நம்பிக்கை காரணமாகவும், விவசாயிகள் தங்கள் பகுதிக்கு அருகில் உள்ள அரசின் கமிட்டிகளுக்கு எடுத்து சென்று வர்த்தகம் செய்து வரு கின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, உளுந்துார்பேட்டை, சங்கராபுரம், மணலுார்பேட்டை, தியாகதுருகம், சின்னசேலம் மற்றும் திருநாவலுார் ஆகிய 7 இடங்களில் மார்க்கெட் கமிட்டிகள் இயங்கி வருகின்றது. இந்த 7 கமிட்டிகளிலும், நடப்பாண்டு ஏப். 1 முதல் ஜூலை 31 வரையிலான காரீப் கால அறுவடை பருவத்தில் கள்ளக்குறிச்சி கமிட்டியில் 22,152 விவசாயிகளின் 5,219 மெட்ரிக் டன் விளைபொருட்கள் ரூ.43.21 கோடிக்கு விற்பனையாகி உள்ளது. உளுந்துார்பேட்டை கமிட்டியில் 15,524 விவசாயிகளின் 9,588 மெட்ரிக் டன் விளைபொருட்கள் ரூ.29.96 கோடிக்கு விற்பனையானது. சங்கராபுரம் கமிட்டியில் 2,303 விவசாயிகளின் 3,046 மெட்ரிக் டன் விளைபொருட்கள் ரூ.6.69 கோடிக்கும், மணலுார்பேட்டை கமிட்டியில் 1,907 விவசாயிகளின் 872 மெட்ரிக் டன் விளைபொருட்கள் ரூ.2.19 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது. தியாகதுருகம் கமிட்டியில் 3,507 விவசாயிகளின் 1,599 மெட்ரிக் டன் விளைபொருட்கள் ரூ.4.56 கோடிக்கும், சின்னசேலம் கமிட்டியில் 1,247 விவசாயிகளின் 331 மெட்ரிக் டன் விளைபொருட்கள் ரூ.1.47 கோடி, திருநாவலுார் கமிட்டியில் 776 விவசாயிகளின் 98.72 மெட்ரிக் டன் விளைபொருட்கள் ரூ. 36 லட்சத்திற்கு விற்பனையானது. இந்த 7 கமிட்டிகளிலும் மொத்தம் 47,416 விவசாயிகள் கொண்டு வந்த 20,754 மெட்ரிக் டன் விவசாய விளைபொருட்கள் ரூ.88.46 கோடிக்கு வர்த்தகம் செய்யப்பட்டுள்ளதாக, கள்ளக்குறிச்சி மாவட்ட மார்க்கெட் கமிட்டி பொறுப்பு அதிகாரி சந்துரு தெரிவித்தார்.