போக்குவரத்து நெரிசல் : வாகன ஓட்டிகள் அவதி
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண கோரிக்கை எழுந்துள்ளது. கள்ளக்குறிச்சியில் கச்சேரி சாலை மற்றும் காந்தி சாலையில் வாகன நெரிசல் ஏற்படும் முக்கிய இடங்களில் விதிமுறையை மீறி கார்கள், ஆட்டோக்கள், பைக்குகள் நிறுத்தப்படுகின்றன.இதனால் கனரக வாகனங்கள் சாலையை கடந்து செல்வது, சிரமமாக உள்ளது. மேலும், கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இது ஒருபுறம் இருக்க, கள்ளக்குறிச்சியில் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் மகப்பேறு பிரிவு அமைந்துள்ளது. சிறுவங்கூரில் மற்ற அனைத்து மருத்துவ பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. இதனால் காந்தி சாலை, கச்சேரி சாலை வழியாக ஆம்புலன்ஸ் வாகனங்கள் செல்லும் போது, நெரிசலில் திணறும் நிலை உள்ளது.அதேபோல, கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் அரசு துறைகளின் பல்வேறு மாவட்ட அலுவலர்களும் நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர்.நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக தாறுமாறாக வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.