ஓடும் பஸ்சில் பயணி உயிரிழந்த சோகம்
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே அரசு பஸ்சில் பயணம் செய்த எலக்ட்ரீசியன் நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்தார். வேலூர் மாவட்டம், அணைக்கட்டை அடுத்த இறைவன்காடு கிராமத்தைச் சார்ந்தவர் ஜானகிராமன் மகன் நரேஷ் குமார், 37; எலக்ட்ரீசியன். கடந்த சில நாட்களாக மதுரையில் தங்கி வேலை செய்து வந்தார். கடந்த 3ம் தேதி உடல்நிலை பாதிக்கப்பட்டு அங்குள்ள அரசு மருத்துவமனையில் இரண்டு நாட்கள் சிகிச்சை பெற்று பின் சொந்த ஊருக்கு செல்வதற்காக கடந்த 11ம் தேதி மதுரையில் இருந்து வேலுார் செல்லும் அரசு பஸ்சில் நண்பர் செந்தில் என்பவருடன் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். 12ம் தேதி அதிகாலை 12:15 மணி அளவில் திருக்கோவிலுார் புறவழிச் சாலையில் பஸ் சென்று கொண்டிருந்தபோது, நரேஷ் குமாருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. உடன் வந்த அவரது நண்பர் செந்தில், 108 ஆம்புலன்சிற்கு போன் செய்ததை அடுத்து பஸ்சை டிரைவர் திருக்கோவிலுார் , சந்தப்பேட்டை, புற வழிச் சாலை பெட்ரோல் பங்கில் நிறுத்தினார். அங்கு சென்ற 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பரிசோதித்த போது நரேஷ் குமார் இறந்தது தெரிய வந்தது. இது குறித்து அவரது அண்ணன் குமார் கொடுத் த புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றன.