மேலும் செய்திகள்
முன் விரோத தகராறில் வாலிபர் சுட்டு கொலை
27-Sep-2025
கச்சிராயபாளையம்: கல்வராயன்மலையில் நாட்டு துப்பாக்கியால் சுட்டு வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவரை போலீசார் கைது செய்தனர். கல்வராயன்மலையில் உள்ள கொட்டபுத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் பிச்சன் மகன் பிரகாஷ், 26; இவர் கடந்த 25ம் தேதி மாலை 4:00 மணிக்கு, தனது வயலில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென பலத்த வெடி சத்தம் கேட்டது. வயலில் இருந்த பிரகாஷ் பின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்தார். அருகில் இருந்தவர்கள் பிரகாஷ்சை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். கச்சிராயபாளையம் இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் முன் விரோதம் காரணமாக நடுமதுார், ஏரிக்கரை கிராமத்தை சேர்ந்த ஆண்டி மகன் தங்கராஜ் அவரது சகோதரர்கள் 3 பேருடன் சேர்ந்து நாட்டு துப்பாக்கியால் பிரகாஷ்சை சுட்டு கொலை செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து ஆண்டி மகன்கள் தங்கராஜ், செல்வம், அண்ணாமலை, இளையராஜா ஆகிய நான்கு பேர் மீது வழக்கு பதிந்த கரியாலுார் போலீசார், தங்கராஜ், 51; அண்ணாமலை, 48; ஆகிய இருவரை நேற்று கைது செய்தனர்.
27-Sep-2025