தரமான கல்விக்கு முன்னோடியாக திகழும் தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி
ஒ ருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டமாக இருந்தபோது, கள்ளக்குறிச்சி பகுதியில் தரமான கல்வி வழங்கியதால் தங்களின் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க பெற்றோர்கள் காத்திருந்த பெருமைமிகு பள்ளியாக தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி சிறப்பு பெற்றது. இப்பள்ளி கடந்த 1956ம் ஆண்டு துவங்கப்பட்டு 1957ல் உயர்நிலைப் பள்ளியாகவும், 1958ல் மேல்நிலைப் பள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்டது. தியாகதுருகத்தைச் சேர்ந்த காளத்தி செட்டியார், கோவிந்தசாமி நாயுடு, புலவர் அரங்கநாதன் பிள்ளை, ராசுபிள்ளை, நரசிம்மலு நாயுடு, பக்தவாச்சலம் நாயுடு, வெங்கடாஜலம் பிள்ளை, பொன்னுசாமி உடையார், குப்புசாமி பிள்ளை ஆகியோர் பள்ளிக்கான நிலத்தை நன்கொடையாக வழங்கியுள்ளனர். இதன் காரணமாக பள்ளி வளாகம் 6.6 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. பெற்றோர் ஆசிரியர் கழக முன்னாள் தலைவராக இருந்த பொன் ராமகிருஷ்ணன் இப்பள்ளி வளர்ச்சிக்கும், கல்வி மேம்பாட்டிற்கும் அரசு திட்டங்களை கொண்டு வருவதில் தனி கவனம் செலுத்தி முக்கிய பங்காற்றினார். இதன் காரணமாக மரத்தடியில் படித்த மாணவர்களுக்கு வகுப்பறை கட்டடங்கள் கட்டி கொடுக்கப்பட்டது. கடந்த 25 ஆண்டுகளுக்கு முன், இப்பள்ளியில் படித்தால் அரசு அதிகாரிகள், டாக்டர்களாக உயர முடியும் என்ற நம்பிக்கையை விதைக்கும் வகையில் மாணவர்களுக்கு தரமான கல்வியை ஆசிரியர்கள் கற்பித்தனர். மாணவர்களின் தனித்திறமையை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில் ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் போட்டி போட்டுக்கொண்டு பாடம் நடத்தினர். இதன் காரணமாக ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டமாக இருந்தபோது தங்களின் குழந்தைகளை இப்பள்ளியில் சேர்க்க பெற்றோர்கள் இடையே கடும் போட்டா போட்டியே நிலவியது. இப்பள்ளியில் சேர்ந்து விட்டாலே தங்கள் குழந்தைகள் வாழ்வில் உயர்ந்த நிலைக்கு செல்வார்கள் என்ற நம்பிக்கை பெற்றோர்கள் இடையே ஆணித்தரமாக இருந்தது. இதை மெய்பிக்கும் வகையில் இப்பள்ளியில் படித்த பலர் ஐ.பி.எஸ்., அதிகாரிகளாகவும், டாக்டர்களாகவும், அரசின் பல்வேறு துறைகளில் உயர் அதிகாரிகளாகவும் சிறப்பு பெற்றுள்ளனர். இன்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பல டாக்டர்கள் இப்பள்ளியின் முன்னாள் மாணவர்களாவர். இதில் குறிப்பிடும் படியாக ஐ.பி.எஸ்., அதிகாரிகளான கண்ணன், கொளஞ்சி, ஐ.எப்.எஸ்., அதிகாரியான சுதாகர் ஆகியோர் இங்கு படித்து சாதனை படைத்தவர்கள். அதேபோல் கள்ளக்குறிச்சி எம்.பி., மலையரசன் இப்பள்ளியில் படித்தவராவார். மாவட்டத்தில் சிறந்து விளங்கும் மவுண்ட் பார்க் பள்ளி தாளாளர் மணிமாறன் இப்பள்ளியின் முன்னாள் மாணவர்தான். தரமான கல்வியை வழங்குவதில் இன்றும் முன்னோடியாக விளங்குகிறது. தற்போது 1440 மாணவர்கள் படிக்கின்றனர். 58 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். கற்றல் சிரமங்கள் உள்ள மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி, மாற்றுத்திறனாளி மாணவர்கள் மீது தனி கவனம் செலுத்துதல், பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள், போதிய கணினி வசதிகள் உள்ளதால் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க உதவியாக உள்ளது. மாவட்டத்தில் மிகப்பெரிய விளையாட்டு மைதானம் அமைந்துள்ள பள்ளியாக உள்ளது. மாணவர்கள் பல்வேறு விளையாட்டில் கவனம் செலுத்தி மாவட்ட, மண்டல அளவில் நடக்கும் போட்டிகளில் பரிசும், பதக்கமும் பெறுகின்றனர். கடந்தாண்டு மாநில அளவில் நடந்த பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் இப்பள்ளியில் இருந்து 123 பேர் பங்கேற்று சாதனை படைத்தனர். இப்பள்ளியில் என்.சி.சி.,- என்.எஸ்.எஸ்., உள்ளிட்ட இயக்கங்களின் செயல்பாடுகளில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று சிறப்பு பெற்று விளங்குகின்றனர். இங்கு என்.சி.சி. - ஏ சான்றிதழுக்கான தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. மாணவர்களுக்கு மனநலன் யோகா பயிற்சி வகுப்புகள், உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவரான திருஞானசம்பந்தம், தலைமையாசிரியராக பணிபுரிகிறார். தன்னலம் கருதாமல் பாடம் கற்பித்த ஆசிரியர்களின் சேவையால் பல சாதனை மாணவர்களை உருவாக்கி வாழ்வில் உயரவைத்த பெருமைக்குரிய இப்பள்ளி இன்னும் அதன் கம்பீரத்தோடு உயர்ந்து நிற்கிறது.