தி.மு.க.,கவுன்சிலரை கைது செய்யக்கோரி வி.ஏ.ஓ.,க்கள் திடீர் முற்றுகை: சப் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
திண்டிவனம்: திண்டிவனத்தில் வி.ஏ.ஓ.,மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில், தி.மு.க.,கவுன்சிலரை கைது செய்ய வலியுறுத்தி, சப் கலெக்டர் அலுவலகத்தை வி.ஏ.ஓ.,சங்கத்தினர் முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகராட்சி, 28 வது வார்டு தி.மு.க.,கவுன்சிலர் சந்திரன். இவரது வார்டை சேர்ந்த சுமதி என்பவரின் மகள் கீர்த்தனாவிற்கு, திருமண சான்றிதழ் பெற, திண்டிவனம் நகர வி.ஏ.ஓ.,சிற்றரசுவை, 42; சந்திக்க கடந்த, 29 ம் தேதி பிற்பகல் ராஜாங்குளம் பகுதியில் உள்ள, அவரது அலுவலகத்திற்கு சென்றார். அப்போது கவுன்சிலர் சந்திரனின் ஆதரவாளர்களுக்கும், வி.ஏ.ஓ.,விற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கை கலப்பானது. இந்த பிரச்னை தொடர்பாக சந்திரனின் ஆதரவாளர்கள் தாக்கியதாக வி.ஏ.ஓ.,சிற்றரசு டவுன் போலீசில் புகார் கொடுத்தார். இதேபோல சந்திரன் சார்பிலும் புகார் அளிக்கப்பட்டது. இந்த பிரச்னை தொடர்பாக திண்டிவனம் டவுன் போலீசார் சந்திரன் உள்ளிட்ட, 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து, மணிகண்டன், கார்த்திக் ஆகிய இருவரை கடந்த, 29ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் நேற்று மாலை 6:00 மணிக்கு, திண்டிவனம் அருகே ஜக்காம்பேட்டையிலுள்ள சப் கலெக்டர் அலுவலக வளாகத்தில், கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்கத்தை சேர்ந்த வி.ஏ.ஓ.,க்கள் திடீரென்று முற்றுகையிட்டு பேராட்டம் நடத்தினர். வி.ஏ.ஓ., மீது தாக்குதல் நடத்திய கவுன்சிலர் சந்திரனை கைது செய்யக்கோரி கோஷம் போட்டனர். தொடர்ந்து சங்க நிர்வாகிகள் கூறுகையில், 'சந்திரனை கைது செய்யாவிட்டால், திண்டிவனம் உட்கோட்டத்திலுள்ள வி.ஏ.ஓ.,க்கள் அனைவரும், 3 ம் தேதி (இன்று) முதல் ஆன்லைன் மூலம் சாதி சான்றிதழ், இறப்பு மற்றும் பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட, 19 சான்றிதழ் வழங்கும் பணியை புறக்கணிக்கப்போம்,' என்றனர். தொடர்ந்து பேராாட்டத்தில் ஈடுபட்ட வி.ஏ.ஓ.,க்கள் சப ்கலெக்டர் திவ்யான்சு நிகமை சந்தித்து, கவுன்சிலர் சந்திரனை கைது செய்ய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என, கோரிக்கை வைத்தனர். இந்த போராட்டம் ஒரு மணி நேரம் வரை நீண்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.