கழிவுநீர் கால்வாய் அமைக்க கோரி கிராம மக்கள் மறியல்
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அடுத்த நரியந்தல் கிராமத்தில் கழிவு நீர் கால்வாய் அமைக்க கோரி கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருக்கோவிலுார் அடுத்த நரியந்தல் கிராமத்தில் கழிவு நீர் கால்வாய் குறிப்பிட்ட துாரம் வரை மட்டுமே அமைத்தனர். எஞ்சிய குடியிருப்பு பகுதிகளில் கழிவு நீர் சாலையில் வழிந்தோடுகிறது. கொசு தொல்லை மற்றும் துர்நாற்றம் வீசுவதுடன் மெயின் ரோட்டில் போக்குவரத்திற்கும் இடையூறாக இருப்பதாக கூறி அப்பகுதி மக்கள் நேற்று காலை 10:00 மணிக்கு, திருக்கோவிலுார் - சங்கராபுரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த திருப்பாலபந்தல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சமாதானப்படுத்த முற்பட்டனர். எனினும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதி அளித்தால் மட்டுமே கலைந்து செல்வோம் என கூறினர். இதனையடுத்து திருக்கோவிலுார் பி.டி.ஓ, செல்வகணேஷ் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். கழிவு நீர் சாலையில் செல்லாத வகையில் விரைவில் கால்வாய் அமைத்துக் கொடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனால் 45 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.