போதை இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும்; விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில செயலாளர் அறிவுரை
கள்ளக்குறிச்சி : போதை இல்லாத தமிழகத்தை இளைஞர்கள் உருவாக்க வேண்டும் என விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில செயலாளர் ஆலோசனை வழங்கினார்.தியாகதுருகம் அடுத்த நாகலுாரில் மாவட்ட விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர் கணேஷ் தலைமை தாங்கினார். கோ ரக்ஷா அமைப்பின் மாவட்ட அமைப்பாளர் திருமால் அழகன், மாவட்ட பொருளாளர் சிவராஜ் முன்னிலை வகித்தனர்.விஷ்வ ஹிந்து பரிஷத் கோட்ட அமைப்பு செயலாளர் மீனாட்சி சுந்தரம் வரவேற்றார். மாநில அமைப்பு செயலாளர் பாலாஜி, சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, கோபிசெட்டிபாளையத்தில் நடந்த மாநில அளவிலான பஜ்ரங்தள் முகாமில் கலந்து கொண்ட அமைப்பின் உறுப்பினர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.தொடர்ந்து பேசிய பாலாஜி, மாணவர்களை சந்தித்து வாராந்திர சத்சங்கம் நடத்த வேண்டும், அதிகளவில் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும். மரக்கன்றுகளை நன்றாக வளர்த்து பராமரிப்பவர்களுக்கு பரிசு வழங்கப்படும். போதை இல்லாத தமிழகத்தை இளைஞர்கள் உருவாக்க வேண்டும். கூட்டுக் குடும்பமாக வாழ வேண்டும் என அறிவுறுத்தி பேசினார். விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட செயலாளர் பிரேம்குமார், மாவட்ட இணை செயலாளர் வேலு உள்ளிட்ட நிர்வாகிகள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். பூஜாரிகள் பேரமைப்பின் மாவட்ட அமைப்பாளர் தாயுமானவன் நன்றி கூறினார்.