நீர்வரத்து கால்வாய் சீரமைப்பு பணி துவக்கம்
கள்ளக்குறிச்சி: வடக்கிழக்கு பருவமழையையொட்டி கள்ளக்குறிச்சியில் ஏரிகளின் நீர் வரத்து கால்வாயில் சீரமைப்பு பணிகள் துவங்கி உள்ளது. கள்ளக்குறிச்சி பகுதியில் ஏரி பாசனத்தை நம்பி பல்வேறு பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறன. பருவ மழை காலங்களில் கல்வராயன்மலை அடிவாரத்தில் உள்ள கோமுகி அணை நிரம்பும் போது ஆறு வழியாக தண்ணீர் வெளியேற்றப்படும். அத்தருணத்தில் ஆறுகளில் உள்ள அனைத்து தடுப்பணைகளும் வழிந்தோடும். ஆறுகளில் உள்ள தடுப்பணைகளில் இருந்து சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஏரிகளுக்கு நீர் வரத்து ஏற்படும் வகையில் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளன. அதன் மூலம் பெரும்பாலான ஏரிகளுக்கு நீர் வரத்து ஏற்பட்டு நிரம்பி வருகிறது. இந்நிலையில், தடுப்பணைகளிலிருந்து ஏரிகளுக்கு செல்லக்கூடிய பெரும்பாலான நீர் வரத்து கால்வாய்களில் அதிகளவில் விழல், செடி கொடிகள் வளர்ந்து புதர்போல் காட்சியளித்தது. இதனால் பருவ மழையின் போது நீர் வரத்து கால்வாய் மூலம் ஏரிகளுக்கு தண்ணீர் செல்வதில் சிக்கல் நிலவி வருகிறது. இதேபோல் கள்ளக்குறிச்சி கருணாபுரம் தடுப்பணையில் இருந்து தென்கீரனுார் ஏரிக்கு செல்லக்கூடிய நீர் வரத்து கால்வாய் புதர்கள் மண்டி கிடந்தது. இதனை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து பருவ மழை துவங்கி உள்ள நிலையில், தற்போது ஏரிகளின் நீர் வரத்து கால்வாய் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.