கோமுகி அணையில் நீர் மட்டம் உயர்வு
கச்சிராயபாளையம் : வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் கோமுகி அணை மற்றும் கச்சிராயபாளையம் சுற்றியுள்ள ஏரிகளில் நீர் நிரம்பி வருகிறது. கோமுகி அணை பகுதியில் நேற்று 9 மில்லி மீட்டர் மழை பதிவாகியது. மேலும் கல்வராயன் மலையில் உற்பத்தியாகும் கல்படை, பொட்டியம், மல்லிகைப்பாடி ஆகிய ஆறுகளில் நீர் வரத்து அதிகரித்து வினாடிக்கு 150 கன அடி நீர் வர துவங்கியுள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து மொத்த கொள்ளவான (560 மில்லியன கன அடி) 46 அடியில் தற்போது (179.38 மில்லியன் கன அடி) 32 அடியை எட்டியுள்ளது. சம்பா சாகுபடி குறித்து கவலை அடைந்திருந்த இப்பகுதி விவசாயிகள் அணையின் நீர் மட்டம் உயர்ந்து வருவதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இந்நிலையில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மதுசூதனரெட்டி, கலெக்டர் பிரசாந்த் ஆகியோர் ஏரிகள் மற்றும் கோமுகி அணையை நேரில் சென்று நீர் இருப்பு மற்றும் கொள்ளவு குறித்து ஆய்வு செய்தனர். மேலும் நீர் வரத்து வாய்க்கால்களில் தண்ணீர் செல்வதற்கு தடையாக இருந்த கழிவுகள் மற்றும் மண்டி கிடந்த புதர்களை உடனடியாக அகற்ற உத்திரவிட்டனர்.பொதுப்பணித்துறையின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தது, ஆலோசனை வழங்கினர். ஆய்வின் போது பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் மோகன், உதவி பொறியாளர் விஜயகுமரன், சின்னசேலம் தாசில்தார் மனோஜ்முனியன், வருவாய் ஆய்வாளர் பாபுகணபதி உட்பட அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.