குடிநீர் தட்டுப்பாடு நாளுக்கு நாள்... அதிகரிப்பு; புதிய திட்டம் செயல்படுத்தப்படுமா?
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு தலை துாக்க துவங்கி உள்ளதால், பற்றாக்குறையை தீர்க்கவும், புதிய குடிநீர் திட்டங்களை செயல்படுத்தவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாவட்ட தலைநகரமாக உள்ள கள்ளக்குறிச்சியில், ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். வேலை, பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக, சுற்று வட்டார பகுதிளில் இருந்து, நகரத்திற்கு வந்து குடியேறுபவர்களின், எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கள்ளக்குறிச்சி நகருக்கு கடந்த, 1967ம் ஆண்டு முதல் கோமுகி ஆற்றில் இருந்து ஆழ்குழாய் அமைத்து போலீஸ் நிலையம் அருகில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு நீர் ஏற்றி பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து கடந்த, 1988ம் ஆண்டு துவக்கப்பட்ட, மணலுார்பேட்டை-கள்ளக்குறிச்சி குடிநீர் திட்டம் மற்றும்கடந்த, 2001ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட ரிஷிவந்தியம்-சின்னசேலம் கூட்டு குடிநீர் திட்டம், நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. இதன் மூலம், திருக்கோவிலுார் தென்பெண்ணையாற்றில், சுந்தரேசபுரம் அருகே திறந்த வெளி கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகள் வழியாக, திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தியாகதுருகம், கள்ளக்குறிச்சி வழியாக சின்னசேலம் வரை குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்திற்கு கள்ளக்குறிச்சி தியணைப்பு நிலையம் அருகில் கேசவலு நகர், கரியப்பா நகர், ராஜா தியேட்டர் அருகில், ஏமப்பேர் பகுதிகளில் குடிநீர் தேக்க தொட்டி அமைத்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. வினியோகம் குறைவு
இந்த நிலையில் ரிஷிவந்தியம் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு போதிய மின் வசதி செய்திருப்பினும், நீரேற்று நிலையங்களில் ஏற்படும் பழுதுகள் காரணமாகவும், கோடைக்காலங்களில் நீரின் அளவு குறைந்து போவதாலும், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. அத்துடன் பல இடங்களிலும் குழாய்கள் மற்றும் நீரேற்று நிலையங்களில் அடிக்கடி ஏற்படும் பழுதால், குடிநீர் வீணாகி கடைக்கோடி வரை முழுமையாக வினியோகம் செய்ய முடியாமல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. நிலத்தடி நீர் மட்டம் சரிவு
இது ஒருபுறம் இருக்க, கள்ளக்குறிச்சியில் பல்வேறு பகுதிகளிலும், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. மேலும், ஆழ்துளை கிணறுகளிலும் தண்ணீர் வற்றி தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், நகர மக்களுக்கு ஏமப்பேர் கிணறு, விநாயகா நகர் பொதுக்கிணறுகளில் இருந்தும் முழுமையாக நீர் எடுத்து அப்பகுதியில் வினியோகம் செய்வதுடன், மேலும் பல இடங்களுக்கு நகராட்சி சார்பில் டிராக்டர் மூலமாக குடிநீர் வினியோகம் செய்யும் நிலை நீடித்து வருகிறது. புதிய திட்டம் தேவை
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'கள்ளக்குறிச்சி, மாவட்ட தலைநகராக உருவெடுத்து பல ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இப்பகுதிக்கென, கடந்த 2001ம் ஆண்டிற்கு பிறகு குடிநீர் தேவையை பூர்த்தி செய்திட புதிய திட்டங்கள் எதுவும் செயல்படுத்தவில்லை. தற்போது குடிநீர் பிரச்னை தலைதுாக்க துவங்கி விட்டது. அதனால், மாவட்ட மக்களின் தேவையை பூர்த்தி செய்திடும் வகையில் புதிய திட்டத்தை அரசு செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,' என்றனர்.