உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுப்பது... எப்போது ? கடும் போக்குவரத்து நெரிசலில் திருக்கோவிலுார்

ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுப்பது... எப்போது ? கடும் போக்குவரத்து நெரிசலில் திருக்கோவிலுார்

திருக்கோவிலுார் நகராட்சி அந்தஸ்தை பெற்றுவிட்டாலும், அதற்கான அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த அரசு நிர்வாகம் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றே கூறலாம். பறந்து விரிந்த நான்குமாட வீதிகளை கொண்ட நகரில், குறிப்பாக, வடக்கு வீதி, தெற்கு வீதி, சன்னதி வீதிகளில் ஆக்கிரமிப்புகள் 15 அடி துாரம் வரை நீண்டு விட்டது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மட்டுமல்லாது நடந்து செல்பவர்கள் கூட கூட்டத்தில் சிக்கி தவிக்கின்றனர். நடுநாட்டு திருப்பதி என போற்றப்படும் உலகளந்த பெருமாள் கோவில் அமைந்திருக்கும் சன்னதி வீதி பறந்து விரிந்த விசாலமான தெருவாகும். கோட்டையில் நுழைவாயிலாகவும் இருந்ததாக தொல்லியல் ஆய்வறிக்கை கூறுகிறது. வருவாய்த் துறையின் அவளத்தால் சாலை பல மீட்டருக்கு பட்டா போட்டு கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது இருக்கும் சாலையும் ஆக்கிரமிப்பில் சிக்கி தவித்து வருகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் வாகனத்தை நிறுத்த முடியாமலும் ஏன் நடந்து செல்ல கூட முடியாத அளவிற்கு சில நேரங்களில் அல்லல்படும் அவலங்கள் நீடிக்கிறது. இதைவிட கொடுமை என்னவென்றால் சாலையை அடைத்து நிறுத்தப்படும் வாகனங்களுக்கு நகராட்சி நிர்வாகம் வாகன கட்டணம் வசூலிக்கிறது.இதே போல் கிழக்கு வீதி, வடக்கு வீதிகளில் ட்ராபிக் ஜாம் பொதுமக்களை மிகுந்த சிரமத்திற்கு ஆளாக்குகிறது. இதனை ஒழுங்கு படுத்த வேண்டிய போக்குவரத்து மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் பல நேரங்களில் இருக்கும் இடம் தெரியாமல் போய்விடுகின்றனர். சாலையை அடைத்திருக்கும் நிரந்தர ஆக்கிரமிப்புகள் ஒரு பக்கம் என்றால், சாலையின் நடுவே பூக்கடை, தள்ளுவண்டி, பழக்கடைகளின் ஆக்கிரமிப்பை ஒழுங்குபடுத்த யாருமே முன்வருவதில்லை. இதன் காரணமாக திருக்கோவிலூர் நகரில் கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகன ஓட்டிகள் நுழைவே அச்சப்படுகின்றனர். இருசக்கர வாகன ஓட்டிகளும் திக்கித் திணறி செல்கின்றனர். இதற்கு இடையில் நடந்து செல்பவர்களும் பாதிக்கப்படுகின்றனர். நீதிமன்ற உத்தரவால் நிரந்தர ஆக்கிரமிப்பை அகற்ற குறிப்பாக சன்னதி வீதி, கிழக்கு வீதி, தெற்கு வீதிகளில் நில அளவையர்களைக் கொண்டு பலமுறை குறியீடு செய்வதுடன் நிறுத்திக் கொண்டு, சாலையோரம் வைத்திருக்கும் சிறு வியாபாரிகளின் கடைகளை அப்புறப்படுத்தி விட்டு ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு விட்டதாக நகராட்சி நிர்வாகமும், நெடுஞ்சாலை துறையும் தப்பித்துக் கொள்கிறது.ஐ.ஏ.எஸ்., கேட்டரில் இருக்கும் சப் கலெக்டரும் இது பற்றி கண்டு கொண்டதாக தெரியவில்லை. வருவாய்த்துறை, நகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறை, காவல்துறை இணைந்து நேர்மையான, அதிரடி நடவடிக்கை மூலம் நிரந்தர ஆக்கிரமிப்புகளை அகற்றினால் மட்டுமே திருக்கோவிலுாரின் போக்குவரத்து நெரிச்சலுக்கு தீர்வு கிடைக்கும் .மேலும் பார்க்கிங் வசதியின்றி இயங்கும் கடைகளை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கையை அரசியல் தலையீடு இல்லாமல் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதுடன், சாலையோரம் இயங்கும் தள்ளுவண்டி, பழக்கடை, பூக்கடைகளுக்கு மாற்று இடம் வழங்கி ஒழுங்குபடுத்த வேண்டும் என்பதே அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ