மேலும் செய்திகள்
சிதம்பரேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபம்
6 minutes ago
தியாகதுருகம் பகுதியில் வேகமாக நிரம்பும் ஏரிகள்
7 minutes ago
அரசம்பட்டில் நுாலக வார விழா
7 minutes ago
ஆஞ்சநேயருக்கு சம்வத்சரா அபிஷேகம்
7 minutes ago
திருக்கோவிலூர்: திருக்கோவிலுாரில் கடந்த 10 ஆண்டுகளாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததால் அதிகரித்துவிட்ட வாகன போக்குவரத்துக்கு நெரிசலுக்கு ஈடு கொடுக்க முடியாமல் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் திணறி வருகின்றனர். திருக்கோவிலுாரில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான உலகளந்த பெருமாள் கோவில் நகருக்கு மத்தியில் அமைந்துள்ளது. அட்டவீரட்டானங்களில் ஒன்றான வீரட்டானேஸ்வரர் கோவிலும் நகரை ஒட்டியே உள்ளது. திட்டமிட்டு உருவாக்கப்பட்ட நகரின் மைய பகுதியில் இருக்கும் உலகளந்த பெருமாள் கோவிலை சுற்றி நான்கு மாட வீதிகள் உள்ளது. பரந்து விரிந்த வீதியின் வடக்கு வீதி, தெற்கு வீதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக ஆக்கிரமிப்புகள் அதிகரித்து விட்டது. குறிப்பாக தெற்கு வீதியில், ஏரியிலிருந்து தெப்பக்குளத்திற்கு தண்ணீர் செல்லும் பழமையான பாதாள கால்வாய் உள்ளது. இதனை ஆக்கிரமித்து அதையும் கடந்து நிரந்தர வீடுகளை கட்டி வைத்துள்ளனர். இதேபோல் வடக்கு வீதியில் வாகனங்கள் நிறுத்த இடமின்றி வணிக வளாகங்கள் கட்டப்பட்டு இருப்பதால் வாகன ஓட்டிகளும் நடந்து செல்பவர்களும் போக்குவரத்து நெரிசலில் தினசரி சிக்கித் தவிக்கும் நிலை உள்ளது. இதுமட்டும் இன்றி, பழமையான பிரசித்தி பெற்ற உலகளந்த பெருமாள் கோவிலுக்கு செல்லும் சன்னதி வீதியின் இரண்டு பக்கமும் சாலையை ஆக்கிரமித்து வீடுகளை கட்டி பக்தர்கள் கோவிலுக்கு செல்ல முடியாத அவல நிலை உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கும் நகராட்சி நிர்வாகம் கார்களையும், பஸ்சையும் நிறுத்துவதற்கு இடத்தை காண்பிப்பது இல்லை. சாலையோரம் கைகாட்டி விடுகின்றனர். இதனால் நடந்து வரும் பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல முடியாமல் சீக்கி தவிக்கின்றனர். பறந்து, விரிந்த சாலைகளை கொண்ட பழமையான நகரில், தற்பொழுது திரும்பிய பக்கமெல்லாம் நிரந்தர ஆக்கிரமிப்புகள் சாலைகளை கபலீகரம் செய்து கொண்டிருக்கிறது. இது இன்று நேற்று நடக்கும் சம்பவம் அல்ல. கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இதே நிலைதான் தொடர்கிறது. பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி கலெக்டர் முதல் முதல்வரின் தனி செல் வரை புகார் அளித்தும் இதுவரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. ஒவ்வொரு ஆண்டும் நகராட்சி நிர்வாகமும், நெடுஞ்சாலை துறையும் ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் அறிவிப்பை வெளியிடும். வருவாய்த் துறையின் நில அளவைத் துறையும் சேர்ந்து, அளவீடு செய்து ஏற்கனவே ஆக்கிரமிப்பு என கண்டறிந்து போடப்பட்ட குறி மீது அழியாமல் மற்றொரு மார்க் போட்டுவிட்டு சென்று விடுகின்றனர். ஆக்கிரமிப்பு அகற்றுவது தொடர்பாக, சப்கலெக்டர், தாசில்தார் என ஆலோசனை கூட்டம் நடத்துகின்றனர். ஆனால், அதற்கான தீர்வு தான் என்ன செய்வது என இதுவரை தெரியவில்லை. தெற்கு வீதியில் ஆக்கிரமிப்பை அகற்றினால் தான் ஏரியிலிருந்து தெப்பக்குளத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல முடியும் என்ற நிலையில் ஆக்கிரமிப்பு அகற்ற மனமில்லாமல் மார்க்கெட் வீதி வழியாக மாற்றுப்பாதையில் குழாய் புதைத்து தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை ஹிந்து சமய அறநிலைத்துறை செயல்படுத்த துவங்கி, திட்டம் தோல்வியில் நிற்கிறது. திட்டம் பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை ஆக்கிரமிப்பு அகற்றப்படாது, பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் அன்றாட அவதிக்கு தீர்வு காண முடியாது என்ற கொள்கையுடன் திருக்கோவிலுார் வருவாய்த்துறை, நகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறை பிடிவாதமாக உள்ளது. பல ஆண்டுகளாக நீடிக்கும் இப்பிரச்சனைக்கு தடையாக இருப்பது அதிகாரிகளா? அல்லது அரசியல்வாதிகளா? என்பதற்கும் பதில் இல்லை. மக்களுக்காக அதிகாரிகள் என்பதை உணர்ந்து மக்களின் அன்றாட இன்னல்களை போக்கும் வகையில் நிரந்தர ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்றி, சாலையை விரிவுபடுத்தி, போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும் என்பதே இங்கு வரும் பக்தர்கள், நகரவாசிகள், சுற்று வட்டார கிராம மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
6 minutes ago
7 minutes ago
7 minutes ago
7 minutes ago