உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / உளுந்துார்பேட்டையில் புறவழிச்சாலை அமைப்பது... எப்போது?: வாகன போக்குவரத்து நெரிசலை தடுக்க கோரிக்கை

உளுந்துார்பேட்டையில் புறவழிச்சாலை அமைப்பது... எப்போது?: வாகன போக்குவரத்து நெரிசலை தடுக்க கோரிக்கை

வாகன போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த பகுதி உளுந்துார்பட்டை. இப்பகுதியில் நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்து வருகிறது. ஆனால் அதற்கு ஏற்ப சாலை வசதிகள் இல்லை. உளுந்துார்பேட்டையில் திருச்சி சாலை சந்திப்பு முதல் விருத்தாசலம் சாலை சந்திப்பு மற்றும் திருவெண்ணைநல்லுார் சாலை பகுதியில் ஆக்கிரமிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் சாலைப் பகுதி குறுகியதால் வாகன போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு, வாகன நெரிசலால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். வாகன ஓட்டிகள் நலன் கருதி பஸ் நிலையத்தில் இருந்து விருத்தாசலம் சாலை சந்திப்பு வரையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கடைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை விரிவாக்கம் செய்வதிற்கு, நெடுஞ்சாலை துறை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் அளவீடு செய்தது. அன்னை சத்யா தெரு பகுதி அண்ணா சிலை அருகில் இருந்து பஸ் நிலையத்திற்கு வாகனங்கள் செல்வதற்கான சாத்திய கூறுகளையும் ஆய்வு செய்தனர். இதற்கிடையே ஆக்கிரமித்து கடை கட்டியவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். கடைகளை இடிக்க கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால், ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றுதல், சாலை விரிவாக்கம் பணிகளை நெடுஞ்சாலைத்துறை பாதியில் கைவிட்டது. நகர பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க, உளுந்துார்பேட்டையில் இருந்து சேலம் செல்லும் சாலையில் எம். எஸ்., தக்கா பகுதியில் இருந்து திருவெண்ணைநல்லுார் சாலையை இணைக்கும் வகையில் புறவழிச்சாலை அமைப்பதற்கான நடவடிக்கைகளை நெடுஞ்சாலை துறை மேற்கொண்டது. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு நெடுஞ்சாலை துறையினர் புறவழிச்சாலைக்காக அளவீடு செய்து, திட்டம் மதிப்பீடுகளை தயார் செய்தனர். சேலம் ரோட்டில் இருந்து திருவெண்ணெய்நல்லுார் சாலைக்கு புறவழிச்சாலை அமைப்பதற்கான நிலங்களை கையகப்படுத்துவதற்கு ரூ. 5 கோடி மற்றும் 2.50 கி.மீ., துார சாலை அமைக்க ரூ. 14 கோடியில் திட்ட மதிப்பீடு தயார் செய்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் புறவழிச்சாலை பணிகள் குறித்து எந்தவித அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. பல மாதங்கள் கடந்தும் புறவழிச்சாலை பணி துவங்காததால் வாகன நெரிசலில் சிக்கி தவிக்கும் பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். எனவே, வாகன ஓட்டிகளின் நலன் கருதி உடனடியாக புறவழிச் சாலை பணிகளை துவங்க வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ