பஸ் நிலைய பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்றுவது எப்போது? உளுந்துார்பேட்டையில் வாகன ஓட்டிகள் அவதி
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை பஸ் நிலைய பகுதியில் ஆக்கிரமிப்பு, மற்றும் வாகனங்களை சாலையிலேயே நிறுத்துவதை தவிர்க்க நிரந்தர தீர்வு காணும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.உளுந்துார்பேட்டை பகுதி சென்னை, சேலம், திருச்சி, மதுரை, வேலுார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் மையப் பகுதியாக உள்ளது. இதனால் உளுந்துார்பேட்டை வழியாக தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்வதால் 24 மணி நேரமும் வாகன போக்குவரத்து பிசியாக இருக்கும்.முக்கியத்துவம் வாய்ந்த இப்பகுதியில் வாகனங்கள் எளிதில் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் தினசரி அவதிப்பட்டு வருகின்றனர். போக்குவரத்து பாதிப்பு குறித்து போக்குவரத்து போலீசார் ஆய்வு செய்தபோது. பஸ் நிலையத்திற்குள் உள்ளே சென்று, வெளியே வரும் பஸ்களால் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தெரிந்தது. அதன் பேரில் பஸ் நிலையம் முன் பேரிகாடுகளை தடுப்புகளாக அமைத்தனர்.பின் வேலுார், திருவண்ணாமலை மற்றும் இதர பஸ்கள் பஸ் நிலையத்திற்கு வருவதற்கு விருத்தாசலம் சாலை சந்திப்பு பகுதியில் சென்று திரும்பி பஸ் நிலையத்திற்கு வருவதற்கும், விருதாசலம், கடலுார் மற்றும் இதர பஸ்கள் திருச்சி சாலை சந்திப்பு பகுதி சென்று பஸ் நிலையத்திற்கு வருவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.இதனால் பஸ் நிலையத்திற்குள் சாலையின் குறுக்கே பஸ்கள் செல்ல முடியாததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவது தவிர்க்கப்பட்டது.இந்த போக்குவரத்து மாற்றத்திற்குப்பின் பஸ் நிலையப் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவது ஓரளவு கட்டுக்குள் வந்தது.இருப்பினும் பஸ் நிலைய பகுதியில் இருந்து வெளியேறும் சென்னை செல்லும் சாலை பகுதியிலும், திருவெண்ணைநல்லுார் சாலை பகுதியிலும், திருச்சி பஸ்கள் வெளியேறும் பகுதியிலும் ஆக்கிரமிப்பாளர்கள் சாலையோரம் கடைகளை வைத்துள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவது தவிர்க்க முடியாததாக உள்ளது.மேலும், சாலையிலேயே பொதுமக்கள் தங்கள் கார் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்துவதால் பிற வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.அதுமட்டுமின்றி சாலையோர கடைகள், சாலையை ஆக்கிரமித்துள்ளதாலும் போக்குவரத்து நெரிசல் தவிர்க்க முடியாததாகி தொடர் கதையாகி வருகிறது.மேலும், பஸ் நிலையத்தில் பாதசாரிகள் பகுதி ஆக்கிரமித்துள்ளதால் பொதுமக்கள், மாணவர்கள் வெயிலிலும் மழையிலும் பஸ் நிலையத்திற்கு வெளியே காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.எனவே நகராட்சி நிர்வாகம், போலீசார், நெடுஞ்சாலைத் துறையினர் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி வாகனங்கள் எளிதில் செல்லும் வகையில் நிரந்தர தீர்வு காணும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.