திருக்கோவிலுாரில் பிரதான வாய்க்கால்கள் சீரமைப்பது எப்போது? நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
திருக்கோவிலுார் பெரிய ஏரியில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் நிலையில், உபரி நீர் சித்தேரியன் வாய்க்கால், ஆவியூரான் வாய்க்கால்கள் வழியாக சென்று சித்தேரி மற்றும் ஆவியூர் ஏரிகள் நிரம்பி அதன் மூலம் பல நுாறு ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.ஆனால், நகரமயமாக்கல் காரணமாக திருக்கோவிலுார் ஏரி பாசன நிலங்கள் பாதிக்கும் மேல் குடியிருப்புகளாக மாற்றப்பட்டு விட்டது.இதன் காரணமாக சித்தேரியான் மற்றும் ஆவியூரான் வாய்க்கால்களில் விவசாயத்திற்கு தண்ணீர் செல்லாமல் துார்ந்து போனது. மேலும், நகரின் முக்கிய கழிவு நீர் முழுவதும் இந்த வாய்க்கால்கில் திருப்பி விடப்படுகிறது. பொதுப்பணி துறையும் இந்த இரண்டு வாய்க்கால்களையும் சீரமைக்கும் பணியை கைவிட்டு விட்டது.நகரின் மழைநீர் மற்றும் கழிவு நீர் முழுதும் இந்த இரண்டு வாய்க்கால்கள் வழியாக செல்ல வேண்டிய சூழலில், தற்போது நகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது.முதல் கட்டமாக இந்த இரண்டு வாய்க்கால்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்து முழுமையாக அகற்ற வேண்டும். அகலமான வாய்க்கால் குறுகாத வகையில் சுவர் அமைக்க வேண்டும். கால மாறுதலுக்கு ஏற்ப நகரின் கழிவுநீர் அனைத்தும் பிரதான இந்த 2 வாய்க்கால் வழியாகத்தான் செல்ல வேண்டும் என்பதால் போர்க்கால அடிப்படையில் இதனை சீரமைப்பதன் மூலம், என்.ஜி.ஜி.ஓ., நகர் நுழைவு வாயில் பகுதி, ஐந்து முனை சந்திப்பு, பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் தேங்காமல் வழிந்தோட வழி வகுக்கும்.மேலும் மேலவீதி, தெற்கு வீதி, உள்ளிட்ட நகரின் பிரதான வீதிகளில் இருக்கும் கால்வாய்கள் 30 ஆண்டுகள் பழமையானது. இவை இடிந்து, தண்ணீர் செல்லாமல் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் கொசு உற்பத்தி அதிகரித்து, தொற்று நோய்களுக்கு காரணமாக உள்ளது. இதேபோல் நகரின் பல கழிவுநீர் கால்வாய்களை புதுப்பிக்க வேண்டியது நகராட்சியின் அத்தியாவசிய பணியாக உள்ளது.நகரின் கழிவுநீர் கால்வாய் முழுவதையும் பிரதான இரண்டு வாய்க்கால்களுடன் இணைத்து சுத்திகரிப்பு நிலையத்தை ஏற்படுத்தி, விவசாயத்திற்கு தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்வதன் மூலம் திருக்கோவிலுார் நகரில் மழை நீர் மற்றும் கழிவு நீர் தேங்காமல் பாதுகாக்கப்படும். நகராட்சி நிர்வாகம் இதற்கான விரிவான திட்டத்தை தயாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.