உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மாவட்ட அரசு மருத்துவமனை பணி முடிவது எப்போது?: விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை

மாவட்ட அரசு மருத்துவமனை பணி முடிவது எப்போது?: விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை

திருக்கோவிலுாரைச் சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு அருகில் இருக்கும் ஒரே அரசு மருத்துவமனை திருக்கோவிலுார்தான். இங்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. போதுமான வசதிகள் இல்லாததால் நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டது.இதனால், மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என இப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அதனையேற்று, சுகாதாரத் துறை அமைச்சர் சுப்ரமணியன் மருத்துவமனையை ஆய்வு செய்ததைத் தொடர்ந்து மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது.அதற்கான அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்கும் நோக்கில் 54 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 6 தளங்களுடன் கூடிய மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. இந்த மாத இறுதிக்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்ட நிலையில், தற்போது, 75 சதவீத பணிகள் மட்டுமே நிறைவடைந்துள்ளது.புதிய கட்டடம் கட்டுவதற்காக பழுதடைந்த பழைய மருத்துவமனை கட்டடங்கள் இடித்து அகற்றப்பட்டது. இதன் காரணமாக இட நெருக்கடி ஏற்பட்டது. மாவட்ட தலைமை மருத்துவமனைக்கான மருத்துவர்கள் இருந்தும், புறநோயாளிகளுக்கான சிகிச்சை மற்றும் உள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போதுமான இடவசதி இல்லை.இதன் காரணமாக சாதாரண காய்ச்சல், இருமல், சளி போன்ற பிரச்னைகளை தவிர்த்து மற்ற அனைத்து வியாதிகளுக்கும் மேல் சிகிச்சைக்காகசிகிச்சை முண்டியம்பாக்கம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மருத்துவமனைகளுக்கு பரிந்துரைக்கும் முகாமாகவே மருத்துவனை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.திருக்கோவிலுார் சுற்றுவட்டார பகுதிகளில் விபத்து உள்ளிட்ட காரணங்களால் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு அழைத்து வரப்படுபவர்கள் முதலுதவி சிகிச்சைக்குபின் மேல் சிகிச்சைக்கு பரிந்துரைக்கும் போது அவர்களுக்கான தீவிர சிகிச்சையில் ஏற்படும் காலதாமதம் உயிரிழப்பு வரை செல்கிறது. இது ஒரு புறம் இருக்க, விபத்து உள்ளிட்ட அகால மரணங்களால் உயிரிழப்பவர்கள் உடல்கள் உடற்கூறாய்வு செய்ய போதுமான வசதி இல்லாததால் வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவதால், இறந்தவர்களின் உறவினர்கள் அலைகழிக்கப்படும் அவலமும் நீடிக்கிறது.திருக்கோவிலுாரைச் சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட கிராம மக்களின் உயிர் காக்கும் ஒரே மருத்துவமனையாக இருக்கும் சூழலில், கட்டுமானப் பணியை விரைந்து முடித்து, செயல்பாட்டிற்கு கொண்டுவர சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !