வெளிநாட்டில் இறந்த கணவர் உடலை மீட்கக்கோரி மனைவி மனு
கள்ளக்குறிச்சி: வெளிநாட்டில் இறந்த கணவரின் உடலை மீட்டுத்தரக்கோரி, கலெக்டர் அலுவலகத்தில், மனைவி மனு கொடுத்தார்.உளுந்துார்பேட்டை அடுத்த ஆரிநத்தம் பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி மனைவி ராதா கொடுத்துள்ள மனு;எனது கணவர் ராமமூர்த்தி, மலேசியாவில் கடந்த 3 ஆண்டுகளாக ஒரு ஓட்டலில் சர்வராக வேலை செய்தார். எங்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கடந்த வாரம் தனக்கு உடல் நிலை சரியில்லை என வீடியோ கால் மூலம் என்னிடம் கூறினார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாக கூறிய அவர், 23ம் தேதி இறந்துவிட்டதாக ஓட்டல் உரிமையாளர் தகவல் தெரிவித்தார். எனவே, எனது கணவர் உடலை மீட்டுத்தரவும், எங்களின் வாழ்வாதாரத்திற்கு ஓட்டல் உரிமையாளரிடமிருந்து உதவி தொகை, கணவரின் இன்சூரன்ஸ் தொகை மற்றும் சம்பளம் தொகையை பெற்ற தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.