உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சின்னசேலம் வார சந்தை வளாகம் மேம்படுத்தப்படுமா? அதிகாரிகள் நடவடிக்கை தேவை

சின்னசேலம் வார சந்தை வளாகம் மேம்படுத்தப்படுமா? அதிகாரிகள் நடவடிக்கை தேவை

சின்னசேலம்: சின்னசேலம் வார சந்தை வளாகத்தினை மேம்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.சின்னசேலம் நகரில் பாண்டியன்குப்பம் சாலை அருகே கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் வார சந்தை துவங்கப்பட்டது. இங்கு வாரம்தோறும் வியாழன் அன்று கூடும் வார சந்தையில், சுற்றியுள்ள மேலுார், சிறுவத்துார், பாண்டியன்குப்பம், அம்மையகரம், நயினார்பாளையம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் காய்கறி, பழங்கள் மற்றும் ஆடு, மாடு, கோழி ஆகியவற்றை கொண்டு வந்து விற்பனை செய்தனர். இதன் மூலம் கிராம மக்களும் பயனடைகின்றனர்.வார சந்தை வளாகத்தில், 40க்கும் மேற்பட்ட கடைகள் சிமென்ட் ஷீட் மற்றும் தென்னங்கீற்று கூரையுடன் கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை மட்டுமின்றி தரைத்தளங்களில் 100க்கும் மேற்பட்டவர்கள் காய்கறிகள், பழம், விதைகள், ஜவுளி, மீன், கருவாடு, மளிகை பொருட்கள், இரும்பு, பிளாஸ்டிக் பொருட்கள் என அனைத்து வீட்டு உபயோக பொருட்களையும் கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். அத்துடன் இறைச்சி கூடமும் இங்கு செயல்பட்டு வருகிறது.இந்நிலையில், வார சந்தை வளாகம் முழுதும் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. மழைக் காலங்களில் தண்ணீரில் தடுக்கி விழும் அபாயத்தில் வியாபாரிகள், பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.மேலும் கடைகளில் மேற்கூரை சிமென்ட் ஷீட்டுகள் பெரும்பாலும் உடைந்து, கீற்று கொட்டகைகள் பாழடைந்து, வளாகம் முழுவதும் புதர் மண்டி காணப்படுகிறது. இதனால், வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர்.மேலும், இரவு நேரங்களில் இந்த வளாகம் எவ்வித பாதுகாப்பும் இல்லாததால், குடிமகன்களின் கூடாரமாக மாறி உள்ளது. இதனால் அவ்வழியாக இரவு நேரத்தில் செல்லும் பெண்கள் மிகுந்த அச்சத்துடன் கடந்து செல்லும் நிலை ஏற்படுகிறது. எனவே, வார சந்தையில் உள்ள கடைகளை புனரமைக்க வேண்டும். மேலும் குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி தர வேண்டும். சந்தைக்கு வரும் சாலையை மேம்படுத்தி தார் சாலையாக மாற்றிட வேண்டும். சுற்றியுள்ள 50 கிராம மக்கள், பயன்பெறும் சின்னசேலம் வார சந்தையை மேம்படுத்திட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ