உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / நிறுத்தப்பட்ட விளையாட்டு மைதானம் பணிதுவங்கப்படுமா? கல்வராயன்மலை பகுதி மக்கள் எதிர்பார்ப்பு

நிறுத்தப்பட்ட விளையாட்டு மைதானம் பணிதுவங்கப்படுமா? கல்வராயன்மலை பகுதி மக்கள் எதிர்பார்ப்பு

கச்சிராயபாளையம்: கல்வராயன்மலையில் உள்ள வெள்ளிமலையில் பாதியில் நிறுத்தப்பட்ட விளையாட்டு மைதானம் பணிகளை மீண்டும் துவங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கல்வராயன்மலை கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் மேற்கு எல்லையாக உள்ளது. 600 சதுர கி.மீ., பரப்பளவு கொண்ட இம்மலை வடக்கில் திருவண்ணாமலை, தெற்கில் சேலம், வடமேற்கில் தர்மபுரி ஆகிய 3 மாவட்டங்களின் எல்லைகளாகவும் உள்ளது. கல்வராயன்மலையில் 145 க்கும் மேற்பட்ட கிராமங்களில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். ஜாகீர்தார்களின் ஆளுமைக்கு கீழ் இருந்த கல்வராயன்மலை பகுதி சுதந்திரத்திற்கு பின் 1976ம் ஆண்டு தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. அன்று முதல் இன்று வரை கல்வராயன்மலை பகுதி மக்கள் விவசாயம், கால்நடை பராமறிப்பு, கடுக்காய், தேன் சேகரித்தல் போன்ற தொழில்களையே தங்களின் முக்கிய வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். இருப்பினும் இப்பகுதி மக்களின் பொருளாதார நிலை மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது. இப்பகுதி மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக கர்நாடகா மாநிலம், மைசூர், கேரளா போன்ற அண்டை மாநிங்களுக்கு மிளகு பறித்தல், மரம் வெட்டுதல் மற்றும் செங்கல் சூலை பணிகளுக்கும், சென்னை, கோவை, பெங்களூரு போன்ற பெரும் நகரங்களுக்கு கட்டடபணிகளுக்கும் கூலி தொழிலாளர்களாக செல்கின்றனர். சிலர் இப்பகுதி மக்களின் அறியாமையைப் பயண்படுத்தி தங்களின் சுய லாபத்திற்காக சாராயம் காய்ச்சுதல், ஆந்திரா மாநிலத்திற்கு செம்மரம் கடத்தல் போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடத்தி வருகின்றனர். இதனால் இப்பகுதியை சேர்ந்த ஆண்கள் பெருமளவில் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக இங்குள்ள படித்த, பட்டம் பெற்ற இளைஞர்கள் பலரும் வழக்குகளில் சிக்கி, சிறை தண்டனை பெற்று தங்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிக்கொள்ளும் அவலம் ஏற்பட்டுள்ளது. மலை பகுதி மக்களின் வாழ்வதாரத்தை மேம்படுத்த அரசு பல்வேறு திட்டங்களை மேம்படுத்தி உள்ளது. குறிப்பாக பழங்குடியினர் இளைஞர்கள் நல மேம்பாட்டிற்காக கல்வராயன்மலையில் உள்ள வெள்ளிமலையில் மத்திய அரசின் நிதி திட்டத்தின் கீழ் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 1.25 கோடி ரூபாய் மதிப்பில் தேசிய அளவிலான விளையாட்டு மைதானம் அமைக்க 7 ஆண்டுகளுக்கு முன் அ.தி.மு.க., ஆட்சியில் திட்டமிடப்பட்டது. இதில் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளுக்கான பயிற்சிகள் அளிக்க மைாதனம், விளையாட்டு வீரர்களுக்கு ஆண்கள், பெண்களுக்கு என தனித் தனி விடுதி வசதிகள், அலுவலக கட்டடம் மற்றும் பார்வையாளர்கள் அமரும் கேலரியுடன் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, நிதி ஒதுக்கப்பட்டு மைதானம் அமைக்கும் பணிகளும் துவங்கியது. 80 லட்சம் ரூபாய் மதிப்பில் நிலம் சமன் செய்யப்பட்டது. ஆனால், என்ன காரணத்தினாலே திட்டம் கிடப்பில் போடப்பட்டது. அதற்கு பின் கடந்த தி.மு.க., ஆட்சியில் கூட கண்டு கொள்ளவில்லை. இதனால், ஒதுக்கப்பட்ட தொகையில் மீதி தொகை அரசுக்கு திரும்ப அனுப்பட்டது. பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டதால் மைதானம் புதர்கள் மண்டி காணப்பட்டது. தற்போது அப்பகுதி இளைஞர்கள் புதர்களை தங்கள் சொந்த செலவில் அகற்றி தற்காலிகமாக விளையாடுவதற்காக தயார் செய்து வைத்துள்ளனர். வெள்ளிமலையில் பாதியில் நிறுத்தப்பட்ட விளையாட்டு மைதானம் அமைக்கும் பணிகளை மீண்டும் துவங்க கலக்டர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ