உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தெப்பகுளத்திற்கு தண்ணீர் செல்லும் கால்வாய் சீரமைக்கப்படுமா?

தெப்பகுளத்திற்கு தண்ணீர் செல்லும் கால்வாய் சீரமைக்கப்படுமா?

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் தெப்பக்குளம் சீரமைக்கும் பணி துவங்கி 2 ஆண்டுகளைக் கடந்தும் குளத்திற்கு தண்ணீர் கொண்டு வர எந்த முயற்சியும் எடுக்கவில்லை. திருக்கோவிலுார் தென்பெண்ணை ஆற்றில் சிறிதளவு தண்ணீர் வந்தாலும், வாய்க்கால் மூலம் ஏரிக்கு தண்ணீர் வந்துவிடும். ஏரியிலிருந்து கெங்கை அம்மன் கோவில் அருகே உள்ள பெரிய மதகை திறந்தால், நிலவறை கால்வாய் மூலம் இரட்டை விநாயகர் கோவில் அருகே உள்ள செவ்வக வடிவ கருங்கல் தொட்டிக்கு சென்று நேராக கிழக்கு திசை நோக்கி தெற்கு வீதி, வடக்கு வீதி, மதுரை வீரன் கோவில் தெரு வழியாக 400 மீட்டர் பயணித்து தெப்பக்குளத்தை சென்றடையும். அதேபோல் இரட்டை விநாயகர் கோவிலில் இருந்து பிரியும் மற்றொரு கால்வாய் பெருமாள் நாயக்கர் தெரு வழியாக 300 மீட்டர் சென்று தீர்த்த குளத்தில் கலக்கும். இந்த கால்வாய்கள் 2 அடி அகலம், 4 அடி உயரம் கொண்டது. செதுக்கப்பட்ட கருங்கற்களால் கீழ்பகுதி, சைடு கற்கள், மேற்பகுதி சுண்ணாம்பு கலவை கட்டுமானத்தால் மிக நேர்த்தியாக முழுக்க மூடப்பட்டுள்ளது. இந்த கால்வாய்களை முறையாக பராமரிக்காததால் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன் குளத்திற்கு தண்ணீர் செல்லும் பாதையில் அடைப்பு ஏற்பட்டு குளம் வற்ற தொடங்கியது. இக்கால்வாயை துார்வாரி சீரமைத்து தெப்பக்குளத்தில் சரிந்து போன நீராழி மண்டபத்தை புனரமைத்து, குளத்தை மேம்படுத்த வேண்டும் என 10 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 3 கோடி ரூபாயில் திட்டம் தயாரிக்கப்பட்டு, கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பணிகள் துவங்கியது. ஏற்கனவே உள்ள நிலவறை கால்வாயை துார் வாருவதற்கு பதிலாக புதிதாக, மார்க்கெட் வீதி வழியாக குழாய் புதைக்கப்பட்டு ஏரியிலிருந்து தண்ணீர் கொண்டுவர திட்டம் தயாரிக்கப்பட்டது. மார்க்கெட் வீதி வரை குழாய் பதிக்கப்பட்ட நிலையில், அந்த பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதேபோல் குளத்தின் மத்தியில் நீராழி மண்டபம் கட்டுவதற்கு கடகால் தோண்டப்பட்டு தண்ணீர் தேங்கிய நிலையில் அதுவும் கிடப்பில் உள்ளது. குளத்திற்கு தண்ணீர் கொண்டுவர கோடிக்கணக்கில் செலவழித்து சாத்தியமில்லாத புதிய வழித்தடத்தை உருவாக்கும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளின் அலட்சியப் போக்கே தெப்பக்குள சீரமைப்பு பணி அரைகுறையாக நிற்க காரணமாக உள்ளது. இனியும் காலம் கடத்தாமல் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட பழைய பாதாள கால்வாயை, நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில் அடைப்பு ஏற்பட்டிருக்கும் இடத்தை கண்டறிந்து, துார்வாரி சீரமைத்தால், குளத்திற்கு தண்ணீர் கொண்டு செல்வது எளிது என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி