திருக்கோவிலூரில் புதிய பஸ் நிலைய திட்டம் துரிதப்படுத்தப்படுமா? நகர பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு
திருக்கோவிலூர்: திருக்கோவிலூரில் பெருகிவரும் போக்குவரத்திற்கு ஈடு கொடுக்கும் வகையில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் திட்டத்தை அரசு துரித படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளது.திருக்கோவிலூர் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட பழமையான நகரம். சைவமும், வைணவம் தழைத் தோங்கியதற்கு ஆதாரமாக உலகளந்த பெருமாள் கோவிலும், வீரட்டானேஸ்வரர் கோவிலும் சாட்சியாகும். ரகோத்தமர், ஞானானந்தர் உள்ளிட்ட மகான்கள் வாழ்ந்து மறைந்த பிருந்தாவனம் அமைந்திருக்கும் புண்ணிய பூமி. தெய்வீக மன்னன், மெய்ப்பொருள் நாயனார் உள்ளிட்ட மன்னர்களால் அரசாட்சி செய்யப்பட்ட புராதான நகரம்.கால மாறுதலுக்கு ஏற்ப கட்டமைப்புகளை மேம்படுத்த ஆட்சியாளர்கள் முன்வராததால் நகரம் வளர்ச்சி பாதையில் பின்தங்கியுள்ளது. இதனால் கோவில்களுக்கு வரும் ஆன்மீக பக்தர்களும், சுற்று வட்டாரத்தை சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வந்து செல்லும் பஸ் நிலையம் பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.இங்கிருந்து தமிழகத்தின் அனைத்து முக்கிய நகரங்களுக்கு மட்டுமல்லாது, பெங்களூரு உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் நேரடி பஸ் வசதி உள்ளது. எனவே பஸ் நிலையத்தில் ஏற்படும் நெரிசலால் நீண்ட தூரம் செல்லும் வெளியூர் பஸ்கள், பஸ் நிலையத்திற்குள் வராமல் புறவழிச் சாலையில் சென்று விடுகிறது.அதிகரித்துவிட்ட வாகன போக்குவரத்திற்கு ஈடு கொடுக்கும் வகையில் புதிய பஸ் நிலையம் ஏற்படுத்த வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது.இதனை உறுதி செய்யும் வகையில் சில மாதங்களுக்கு முன்பு முன்னாள் எம்.எல்.ஏ., சிவராஜ் குடும்பத்தால் அப்போதைய பேரூராட்சிக்கு பஸ் நிலையம் அமைக்க பம்ப் ஹவுஸ் அருகே தானமாக வழங்கப்பட்ட பகுதியில் புதிய பஸ் நிலையம் ஏற்படுத்த நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனினும் அதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்ததா என தெரிய வில்லை. மாவட்ட நிர்வாகமோ, ஆளும் ஆட்சியாளர்களோ இதில் கவனம் செலுத்தியதாக தெரியவில்லை.தற்பொழுது தேர்வு செய்யப்பட்டு இருக்கும் பகுதியில் புதிய பஸ் நிலையம் ஏற்படுத்தினால், புறவழிச் சாலையுடன் இணைக்க வாய்ப்பு உள்ளது. அவ்வாறு இணைப்பை ஏற்படுத்தினால் நகரில் அதிகரித்துவிட்ட போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வாக அமையும். பயணிகளும் சிரமமின்றி பயணிக்க முடியும்.திருக்கோவிலூர், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளதா? அல்லது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருக்கிறதா? என்ற சந்தேகம் மக்களுக்கு ஒரு புறம் இருந்தாலும், வளர்ச்சி பணி திட்டத்திலும் இதே இழுபறி நிலை தொடர்வதால் மக்களுக்கு தேவையான இது போன்ற திட்டங்களை செயல்படுத்த முடியாமல் தொடரும் முட்டுக்கட்டைக்கு அரசு தான் தீர்வு காண வேண்டும். எது எப்படியோ, புதிய பஸ் நிலையம் ஏற்படுத்தும் திட்டத்தை வாக்களிக்கும் மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.