உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / நாட்டு துப்பாக்கி தயாரித்து விற்பனை கல்வராயன்மலையில் வாலிபர் கைது

நாட்டு துப்பாக்கி தயாரித்து விற்பனை கல்வராயன்மலையில் வாலிபர் கைது

கச்சிராயபாளையம் : கல்வராயன்மலையில் நாட்டு துப்பாக்கி தயாரித்து விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலையில் உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கிகள் புழக்கம் உள்ளது. இதன் மூலம், சமூக விரோதிகள் சிலர் காட்டுப் பன்றிகள், மான், முயல் உள்ளிட்ட வன விலங்குகளை வேட்டையாடி வந்தனர். போலீசார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் அவ்வப்போது சோதனை மேற்கொண்டு, எஸ்.பி.எம்.எல்., வகை ஒற்றைக் குழல் நாட்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்து வந்தனர்.கடந்த மாதம் கரியாலுார் போலீசார் சாராய ரெய்டு சென்ற போது பல்வேறு இடங்களில் 20க்கும் மேற்பட்ட நாட்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர்.இதனைத்தொடர்ந்து எஸ்.பி., ரஜத் சதுர்வேதி உத்தரவின் பேரில், கல்வராயன்மலையில் நாட்டு துப்பாக்கிகள் புழக்கத்தை கட்டுப்படுத்த போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.இந்நிலையில் கல்வராயன்மலையில் உள்ள மேல்நிலவூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான சுந்தரம் மகன் குமார், 30; என்பவர் கடந்த ஓராண்டாக நாட்டுத் துப்பாக்கி தயார் செய்து விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதனைத் தொடர்ந்து கரியாலுார் போலீசார் நேற்று மேல்நிலவூர் கிராமத்தில் உள்ள குமார் வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அவரது வீட்டின் பின்புறம் பட்டறை அமைத்து நாட்டு துப்பாக்கிகள் தயார் செய்து விற்பனை செய்தது உறுதி செய்யப்பட்டது.பட்டறையில் விற்பனைக்காக தயார் செய்து வைத்திருந்த 3 நாட்டு துப்பாக்கிகள், 2 நாட்டு துப்பாக்கிகள் செய்வதற்கான கட்டைகள் மற்றும் 5 துப்பாக்கிகளுக்கு தேவையான டிரிக்கர்கள், துப்பாக்கி தயாரிக்க தேவையான மூலப் பொருட்கள் மற்றும் வெல்டிங் மிஷின்கள், பட்டறை தடவாள பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.இது குறித்த புகாரின் பேரில், கரியாலுார் போலீசார் வழக்குப் பதிந்து குமாரை கைது செய்தனர். எஸ்.பி., நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை