உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தேனீ கொட்டி வாலிபர் பலி பொதுமக்கள் சாலை மறியல்

தேனீ கொட்டி வாலிபர் பலி பொதுமக்கள் சாலை மறியல்

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி அடுத்த கூத்தக்குடி கிராமத்தில் சிவன் கோவில் உள்ளது. இதன் அருகே மரத்தில் கட்டியிருந்த தேனீ கூட்டை நேற்று காலை வட மாநிலத்தை சேர்ந்த நபர்கள் சிலர் அழித்தனர். அப்போது, தேனீக்கள் அவ்வழியாக சென்றவரை விரட்டி சென்று கொட்டியது. இதில், கூத்தக்குடி கிராமத்தை சேர்ந்த பாவாடை மகன் வீரசாசாமி, 45; தனசேகர்,37; ஜெயகாந்தன்,42; வரதராஜ்,37; உள்ளிட்ட பத்து பேர் காயமடைந்தனர். அனைவரும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இந்நிலையில் நேற்று மாலை 6.30 மணியளவில் வீராசாமிக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடன் அவரை சிகிச்சைக்காக கூத்தக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி வீராசாமி உயிரிழந்தார். இதனால் கோபமடைந்த கிராம மக்கள், ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரமும் டாக்டரை பணியமர்த்த கோரி கள்ளக்குறிச்சி - வேப்பூர் சாலையில் இரவு 8:30 மணியளவில் மறியலில் ஈடுபட்டனர். தாசில்தார் பசுபதி, டி.எஸ்.பி., தங்கவேல் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதையடுத்து, 9.15 மணியளவில் கலைந்து சென்றனர். இதனால் 45 நிமிடங்கள் அந்த சாலையில் போக்குவரத்து பாதித்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !