உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / 450 தற்காலிக ஓட்டுனர்களில் 100 பேர் ஓட்டம் நெரிசலில் ஓட்டை பஸ்கள் ஓட்டுவதில் சிரமம்

450 தற்காலிக ஓட்டுனர்களில் 100 பேர் ஓட்டம் நெரிசலில் ஓட்டை பஸ்கள் ஓட்டுவதில் சிரமம்

சென்னை : சென்னையில் போக்குவரத்து நெரிசல், பணிமனையில் உள்ள ஓட்டுவதற்கு தகுதியற்ற பேருந்துகள், மோசமான சாலைகள், விதிமீறல் உள்ளிட்ட காரணங்களால், மாநகர பேருந்துகளை தற்காலிக ஓட்டுனர்களால் சரிவர இயக்க முடியவில்லை. இதனால், சமீபத்தில் 100க்கும் மேற்பட்டோர் வேலைக்கு வராமல் ஓட்டம் பிடித்துள்ளனர்.தமிழகத்தில் உள்ள எட்டு அரசு போக்குவரத்து கழகங்களில் டிரைவர், கண்டக்டர், மெக்கானிக்கல் பிரிவு என, 1.21 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில், ஒவ்வொரு பணிமனைகளிலும் காலி பணியிடங்கள் ஏராளமாக உள்ளன. சில ஆண்டுகளாக நிரந்தர காலிப்பணியிடங்கள் நிரப்பாததால் டிரைவர், கண்டக்டர், பிரிவில் 30 சதவீதம் வரை ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதேவேளையில் புது வழித்தடம், புது பேருந்துகள் என, அரசு அறிவிப்பு வெளியிடுகிறது. இது குறித்து சுற்றறிக்கை வெளியிடப்பட்டு, சம்பந்தப்பட்ட பணிமனை வாயிலாக பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.மேலிடத்தின் அழுத்தம் காரணமாக, விழிபிதுங்கும் பணிமனை அதிகாரிகளுக்கு, பெரும்பாலும் கைகொடுப்பது தற்காலிக ஊழியர்கள் தான்.அதுமட்டுமல்லாமல், பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் வெளியூர் பயணியரை கருத்தில் வைத்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அந்த நேரத்திலும் இரவு, பகல் பாராது, ஏராளமான தற்காலிக ஊழியர்கள் பணியில் ஈடுபடுகின்றனர்.தற்போது கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள், கல்லுாரிகள் திறக்கப்பட்டுள்ளதால், 1,000க்கும் மேற்பட்ட தற்காலிக ஓட்டுனர்களை நியமனம் செய்து, பேருந்துகள் இயக்கப்படுகின்றன.சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் மொத்தமுள்ள 32 பணிமனைகளில், ஒவ்வொரு பணிமனையிலும் தேவைக்கு ஏற்றார்போல், 10 முதல் 15 தற்காலிக ஓட்டுனர்கள் தேர்வு செய்யப்பட்டு, சில நாட்கள் பயிற்சி அளித்து, மாநகர பேருந்துகளை இயக்கி வருகின்றனர்.அந்த வகையில், சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் தேர்வு செய்யப்பட்ட 450 பேரில், இதுவரையில் 100க்கும் மேற்பட்ட தற்காலிக ஓட்டுனர்கள் பணிக்கு வராமல் நின்று விட்டனர். தற்காலிக ஊழியர்களில் பெரும்பாலானோர் லோடு வேன், லாரி, கார் உள்ளிட்ட தனியார் வாகனங்களை இயக்கியவர்கள். அவர்கள், அரசு பணி என்ற காரணத்திற்காக பேருந்துகள் இயக்கத் துவங்கியதும், அதிர்ச்சி காத்திருந்தது. சரியாத எரியாத முகப்பு விளக்கு, பிரேக் பிடித்தால் நிற்காத பேருந்து, ஒழுகும் கூரை, உடைந்து விழும் படிக்கட்டுகள் உள்ளிட்டவையால், பயணியரிடம் இருந்து எதிர்ப்பை எதிர்கொள்வதோடு, பேருந்தை இயக்குவதில் கடும் சிரமத்தையும் சந்திக்கின்றனர். வேறு பேருந்து கேட்டால், 'அட்ஜெஸ்ட்' செய்து செல்லும்படி அதிகாரிகள் சமாளிக்கின்றனர். தீர்வை ஏற்படுத்தி தருவதில்லை.பெரும்பாலான பிரதான சாலைகளில் மெட்ரோ ரயில் பணிகள், குடிநீர் வாரிய பணிகள், வடிகால் பணிகள் நடந்து வருவதால், பெரும்பாலான பிரதான சாலைகள் மோசமான நிலையில், கடுமையான போக்குவரத்து நெரிசலையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அந்த சாலைகளில், பழைய பேருந்துகளை சமாளித்து ஓட்ட முடியாமல், வேலையை விட்டு சென்று விட்டதாக, இன்னொரு தரப்பினர் கூறுகின்றனர்.

பணி நிரந்தரமே தீர்வு

இது குறித்து மாநகர பேருந்து ஓட்டுனர்கள் சிலர் கூறியதாவது:ஒவ்வொரு பணிமனையிலும் ஏற்படும் பற்றாக்குறைக்கு ஏற்ப, 10 முதல் 15 தற்காலிக ஓட்டுனர்களை தேர்வு செய்து, ஓரிரு நாட்களுக்கு பயிற்சி அளித்து, பின்னர் பணி வழங்கப்பட்டது. ஆனால், அவர்களால் சென்னையில் தற்போதுள்ள போக்குவரத்து நெரிசல், மோசமான சாலைகளால், பழைய பேருந்துகளை வைத்துக் கொண்டு, நிர்வாகம் குறிப்பிடும் நேரத்தில் இயக்க முடியவில்லை.மேலும், தற்காலிக ஓட்டுனர்களுக்கு உரிய சான்றிதழ் போன்ற எந்த அங்கீகாரமும் இல்லை. இதனால், தற்காலிக ஓட்டுனர்கள் பணிக்கு வரும் வேகத்திலேயே, திரும்பிச் சென்று விடுகின்றனர்.சிலர் பணிமனையில் இருந்து பேருந்தை எடுத்து, அடுத்து வரும் பிரதான பேருந்து நிலையங்களில் பேருந்தை நிறுத்திவிட்டு ஓடிய சம்பவங்களும் நடந்துள்ளன.இவர்களுக்கு போக்குவரத்து கழக நிரந்தர ஊழியர்களை போல ஊதியமோ, இதர சலுகைகளோ இல்லை. என்றாவது ஒருநாள் அரசு பணியில் நிரந்தரம் செய்யப்படுவோம் என, அவர்களும் மனம் தளராது உழைத்து வருகின்றனர். புதிதாக பணியில் சேருவோருக்கு, ஓய்வூதியம் உள்ளிட்ட சிறப்பு சலுகைகள் இல்லாததாலும், அரசு பணியில் உள்ள ஆர்வம் குறைந்து வருகிறது.எனவே, நிர்வாகம் நிரந்தர பணியாளர்களை நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.மாநகர போக்குவரத்து கழகத்தில் 450க்கும் மேற்பட்ட தற்காலிக ஓட்டுனர்களை தேர்வு செய்து, நிர்வாகத்திற்கு தேவைப்படும் போது அவர்களுக்கு பணி வழங்குகிறோம். அனைத்து ஓட்டுனர்களாலும் சென்னை மாநகரில் பேருந்தை ஓட்டி செல்ல முடியாது. தேர்வு செய்தவர்களில், 100க்கும் மேற்பட்டோர் பணியை விட்டு சென்று விட்டனர். இருப்பினும், புதிதாக ஆட்களை தேர்வு செய்து, பாதிப்பு இல்லாமல் பேருந்துகளை இயக்கி வருகிறோம்.- அதிகாரிகள்,மாநகர போக்குவரத்து கழகம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ